நோயல் நடேசன். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
256 பக்கம், விலை: இந்திய ரூபா 275., அளவு: 22×14 சமீ.
ஆசிரியரின் ஆறாவது நாவல் இது. இந்நாவல் ஆசிரியரின் அனுபவங்களோடு அவரது நுண்ணிய அவதானிப்புகளைச் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதப்பட்டுள்ளது. தான் பிறந்து வளர்ந்த எழுவைதீவையும் தன்னுடைய இளமைக்கால நிகழ்ச்சிகளையும் நாவலில் சுவையாக முன்வைக்கிறார். நாவல் நிகழும் காலம் கடந்த நூற்றாண்டின் 1960-70 காலப்பகுதி. இந்தச் சிறிய தீவில் வாழ்கின்ற மனிதர்கள், அவர்களுடைய நடத்தைக் கோலங்கள், உறவு நிலை, அங்கே நிகழ்கின்ற சம்பவங்கள், வரலாற்று ஓட்டத்தில் நிகழ்த்தப்படுகின்ற நடவடிக்கைகள், அவற்றின் பின்னணி, அந்தக் காலகட்ட அரச நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றை மையப்படுத்தி விரிகிறது இந்நாவல். அறுபது ஆண்டுகளுக்கு முந்திய எழுவைதீவைக் காட்சிப்படுத்தினாலும் அதற்கு முன் பின்னரான சூழ்நிலைகளும் நிகழ் அரசியலும் சமூக நிலவரங்களும் நாவலில் ஆங்காங்கே விரவி உள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான எழுவைதீவுக்கு மனைவியுடன் வருகின்றான் நட்சத்திரன். எழுவைதீவில் ஓரிரவு தங்கும் நட்சத்திரனுடைய கனவும் நினைவுமாக விரிகின்றது இந்நாவல். இந்த நினைவும் கனவும் தொடர்ந்து ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகின்றது. சிறுவனின் மனதில் பதிகின்ற, பாதிப்பை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள், மனிதர்கள், அவர்களுடைய குணவியல்புகள் குறித்துப் பேசுகிறது. ஒவ்வொரு மனிதருடைய செயல்களும் நிகழ்வும் சிறுவர்களின் மனதில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது? குடும்பங்களில் நிலவுகின்ற வன்முறை அவர்களை எப்படிப் பாதிக்கிறது? சிறுவர்களைக் குறித்து பெரியோர்களிடம் காணப்படுகின்ற அபிப்பிராயம் என்ன? அவர்கள் எப்படிச் சிறுவர்களுடன், பிள்ளைகளுடன் நடந்து கொள்கின்றனர் என்பன போன்ற பல விடயங்கள் நாவலில் சித்திரிக்கப்படுகிறன.