ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
v, 39 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-90-9.
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் சைவசமயம் ஆகும். சிவாகமங்கள் சிவனை வழிபடுவதற்குரிய நெறிமுறைகளை விரிவுடன் கூறி நிற்கின்றன. சிவாகம விதிப்படி அமையப்பெற்ற ஆலயத்திற் பரிவாரங்களுடனும் பிரகாரங்களுடனும் விளங்கும் சிவாலயத்தின் தரிசனத்தை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்னும் வழிகாட்டலாக அமையும் அறிவுரை நூலாக அமைவதே “சிவாலய தரிசன விதி” என்னும் யாழ்ப்பாணத்து நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரது உரைநடை நூலாக விளங்குகின்றது. சைவசமயிகள் எவ்விதம் வாழவேண்டும்? சிவாலயங்களுக்கு எவ்விதம் செல்லவேண்டும்? சிவாலயங்களிற் செய்யத்தக்கவை யாவை? செய்யத்தகாதவை யாவை? என விரிவுபடக் கூறியிருப்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது. சிவாகமங்களில் சிவாலய தரிசன விதி பரந்த தன்மையில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. சகலாகம சாரசங்கிரகம் எனும் நூலிற் சிவாலய தரிசன விதி என்பது மிகவும் விரிவுபடக் கூறப்பட்டுள்ளது. இவ்விதியை அடித்தளமாக வைத்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் 51 விடயங்களாகத் தெளிவுபடக் கூறியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.