15121 கமலை ஞானப்பிரகாசர் அருளிச்செய்த புட்பவிதி.

கமலை ஞானப்பிரகாசர் (மூலம்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தது). கொழும்பு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 78 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-91-6.

கமலை ஞானப்பிரகாசர் 16ஆம் நூற்றாண்டில் திருவாரூரிற் பிறந்து வாழ்ந்த ஒரு சைவ ஆசாரியார். கமலை என்பது திருவாரூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. கமலை ஞானப்பிரகாசர் திருவாரூர் ஞானப்பிரகாசர், செட்டித்தெரு ஞானப்பிரகாசர், தேசிகர், பட்டாரகர், பழுதை கட்டி ஞானப்பிரகாச பண்டாரம் எனும் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார். கமலை ஞானப்பிரகாசரின் குரு சிவபுரம் தத்துவப் பிரகாச பண்டாரம் ஆவார். கமலை ஞானப்பிரகாசரின் படைப்புகளில் அண்ணாமலைக் கோவை, அத்துவாக் கட்டளை, அத்துவிதசாரம், ஆயிரப் பிரபந்தம், சாதிநூல், சிவபூசை அகவல், சிவானந்த போதசாரம், சைவானுட்டான அகவல், ஞானப்பள்ளு, தியாகராசர் கழிநெடில், திருவானைக்காப் புராணம், நந்திவனப் புராணம், பிரசாதமாலை, புட்பவிதி, பூமாலை, மழபாடிப் புராணம் என்பவை இவரெழுதிய நூல்கள், தியாகராசலீலை எனும் வடமொழி நூலும் இவராலேயே பாடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவற்றில் அச்சில் வெளிவந்தவை ஒன்பது மாத்திரமே. பூக்களும் பத்திரங்களும் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவது தொன்றுதொட்டு இயற்றப்படும் மரபு. பழந்தமிழர்களின் தாவரக்கலை பற்றிய ஈடுபாடு இந்நூலுக்கூடே வெளிப்பட்டு வியப்பளிக்கின்றது. பூக்களின் பலன்கள், காலத்திற்கேற்ற மலர்கள், விலக்கவேண்டிய மலர்கள், பூக்கள் தரங் குணநலன்கள், உத்தம, மத்திம, அதம வகை மாலை முறைகள் தொடர்பாகவும் காலை, மாலை, அந்தர்யாமப் பூஜைகளுக்கு உகந்த மலர்கள், பூக்களைப் பறிக்கும் விதம், பூக்களில் உறையும் தெய்வங்கள், கடைவீதிப் பூக்களின் அர்ச்சனை பாவத்தைச் சேர்க்கும் எனப் பலதரப்பட்ட விடயங்களைச் சிறப்புற இந்நூலில் விளக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்