சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.
தமிழ் மக்களின் அரசியல்நிலை நின்று இந்தியாவுடனான உறவுகளை கையாளுவது எப்படி என்பது இன்று முக்கியமாகப் பேசப்பட வேண்டிய விடயமாகின்றது. இச்சிறு பிரசுரம் அதற்கான விவாதத்தை தொடக்கி வைக்கின்றது. வடகிழக்கை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதன் மூலம் இலங்கையை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்ற போக்கினை இந்திய அரசு கொண்டுள்ளது. திருக்கோணமலையை மையமாக வைத்து வடகிழக்கு அபிவிருத்திக்கென அது செயற்படுத்த முனையும் திட்டங்கள் இந்நிலைமையை எதிர்வுகூர்கின்றது. “மேற்குலகின் பூகோள நலனும் இந்தியாவின் பிராந்திய நலனும் ஒன்றிணையும் ஒரு தற்காலிகப் புள்ளி காணப்படுகின்றது. அந்தப் புள்ளியை பாதுகாக்கும் அளவுக்கே புதிய அரசியல் யாப்பில் தமிழருக்கான தீர்வு முன்வைக்கபடும். பதவியிலிருக்கும் சிங்களத் தலைவருக்கு, பூகோளம் தழுவிய இந்தப் பிராந்தியம் சார்ந்த புவிசார் அரசியல் யதார்த்தம் நன்கு புரியும் என்பதால், தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பதில் தமது ஆட்சிக்கு நெருக்கடி இருக்கின்றது என்பதைப் பெரிதுபடுத்திக் காட்டி அதன் மூலம் மேற்படி அரசுகளின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கான தீர்வை அற்பமாகச் சுருக்கி தம் இலக்கை அடைந்திடுவர்” என்ற மு.திருநாவுக்கரசுவின் எதிர்வுகூரலும் கணக்கில் எடுக்கப்படவேண்டும். யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 2ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.