கலை வட்டம். யாழ்ப்பாணம்: நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
41 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×21 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் கலை வட்டம் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பனையோலை இழைப்புகளின் காட்சி, 13.01.2020 முதல் 18.01.2020 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஓவியகூடத்தில் இடம்பெற்ற வேளை இவ்வறிமுக இதழ் வெளியிடப்பட்டிருந்தது. பனையோலை இழைப்புக்கான அறிமுகம், ‘கேத்திரகணிதத்தின் அழகியல்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் பனையோலை இழைப்புகளின் வரலாறு, தயாரிப்பு முறை, இத்துறையில் ஈடுபடும் பொதுமக்களுடனான நேர்காணல்கள் என விரிவான தகவல்களை இப்பிரசுரம் வழங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் பனையோலை இழைப்புகள் உணவுப் பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், தொடர்பாடல், உறவுமுறை, தொழில், அழகியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு, ஞாபகம் என பலவற்றுடன் பின்னப்பட்டதாக அமைந்து தனிநபர் மற்றும் கூட்டு அடையாளமாக அர்த்தப்படுகின்றன. அந்த வகையில் அவை தனிநபர்களினதும் சமூகத்தினதும் முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றன. இவ்விழைப்புகள் வெறும் பொருள்சார் உற்பத்திகள் அல்ல. அதனால்தான் பண்பாட்டு மாற்றத்தில் இவ்விழைப்புகளின் பல்பரிமாணத் தன்மை மெல்ல மெல்ல இழக்கப்பட்டுவந்துள்ளது. இக்கண்காட்சியானது கலை-கைவினை என்ற ஏற்றத்தாழ்வான கலை வரலாற்றுப் பிரிப்பினைக் கற்பனைத் திறனும் வெளிப்பாடும் செய்நுட்பமும் சுய விருப்பும் தொடர் போராட்ட குணமும் கொண்ட படைப்பாளிகளின் பின்னல் வேலைப்பாடுகளின் முன்வைப்புகளினூடு கேள்விக்குள்ளாக்குவதுடன் சமூக பண்பாட்டு மீள் இழைப்புகள் பற்றிய வாசிப்பை எம்மிடம் எதிர்பார்த்து நிற்கின்றது. இவ்வாய்வின் மேற்பார்வையாளராக தா.சனாதனன், ஆய்வுக் கட்டுரையாளர்களாக உ.சயந்தன், நா.நர்மதா ஆகியோரும், ஒளிப்படப்பிடிப்பாளராக ச.கஜெந்தன், பு.பிரசாந், கத்தரினா டானியல் ஆகியோரும், கையேட்டு வடிவமைப்பாளராக யோ.நிசாந்தனும் பணியாற்றியுள்ளனர். கலைஞர்களின் நேர்காணல்களை ச.கஜெந்தன், ந.நஹானி பாத்திமா, மு.ம.மனசிரா பானு ஆகியோர் பதிவுசெய்துள்ளனர்.