குயீன் ஜெஸிலி கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ. 17.08.1988இல் அமரரான அல்வாயைச் சேர்ந்த கலைஞர் எஸ்.தம்பிஐயா அவர்களின் வாழ்வும் ஈழத்து இசை நாடக வளர்ச்சியில் அன்னாரின் பங்களிப்பும் பற்றிய ஆய்வு இது. சங்கீதம் முறையாகப் பயின்றதொரு நாடகக் கலைஞராகவும், சோதிடராகவும், சமூக சேவையாளருமாக அறியப்பட்டவர் இவர். இவ்வாய்வினை அறிமுகம், யாழ்ப்பாண இசை நாடக மரபின் வரலாறு, ஈழத்து இசை நாடக வரலாற்றை பதிவு செய்தலில் எழும் சிக்கல்கள், அண்ணாவியார் எஸ். தம்பிஐயாவின் ஆளுமை உருவாக்கம், ஈழத்து இசை நாடக வரலாற்றில் அண்ணாவியார் எஸ்.தம்பிஐயாவின் பங்களிப்புகள் (அறிமுகம், இசை நாடக மரபை நிறுவ உதவியமையும் முன்னணிக் கலைஞர்களின் உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்தமையும், நேர்த்திக்காக இசை நாடகங்களை மேடையேற்றும் மரபைப் பேணத் துணை நின்றமை, அண்ணாவியார் எஸ்.தம்பிஐயாவின் இசை நாடக அரங்க வகிபாகங்கள் – நடிகர், அண்ணாவியார், நாடகாசிரியர், ஒப்பனைக் கலைஞர், ஈழத்தில் ஸ்பெஷல் நாடக மரபை நெறிப்படுத்தியமை), நிறைவுரை ஆகிய இயல்களில் விரிவாக குயீன் ஜெஸிலி கலாமணி எழுதியுள்ளார். திருமதி குயீன் ஜெஸிலி கலாமணி அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு, அல்வாய் வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானத்தில் 25.1.2018 அன்று வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். இந்நூல் 94ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65187).