நாகரட்ணம் மாதவன். யாழ்ப்பாணம்: கலாவித்தகர் நாகரட்ணம் மாதவன், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: S.T.G. பிரிண்டர்ஸ், தாவடி). xviiiஇ, (2), 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 25×18 சமீ. வட இலங்கை சங்கீத சபை, பல்கலைக்கழக மிருதங்கத்துறை மாணவர்களுக்கான செயன்முறை பாடநூல். இந்நூலில் தரம் 1 முதல் ஆசிரியர் தரம் வரை உள்ள பாடங்களைத் தொகுத்து தாளக் குறியீட்டின்படி பாடங்கள் யாவும் எழுதப் பட்டுள்ளன. இது தவிர, இசைக் கச்சேரிகளுக்கு வாசிக்கக்கூடிய பெரிய மோறாக்கள், கோர்வைகள், இறுதிக் கோர்வைகள் என்பனவும் மேலதிகமாக எழுதப்பட்டுள்ளன. இறுதிக் கோர்வைகள் யாவும் இசைக் கச்சேரிகளில் முத்தாய்ப்பாகப் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வட இலங்கை சங்கீத சபை பாடத்திட்டத்திற்கும் பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கும் ஏற்றவகையில் இந்நூல் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே அமைந்துள்ளது. இந்நூல், நூலாசிரியரின் குருநாதர் க.ப.சின்னராசா அவர்களின் வழிநடத்தலிலும் மேற்பார்வையிலும் தாளக் குறியீடுகள், அட்சரங்கள், கோர்வைகள் என்பன சரிபார்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வட இலங்கை சங்கீத சபையின் கலாவித்தகர் பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையின் மிருதங்க இசைமாணிப் பட்டம் எனப் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணிப் பட்டத்தை “லயவியலில்” பெற்றுக்கொண்டவர். அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.