15571 நேரமில்லா நேரம்.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). யாழ்ப்பாணம்: லிங்கம்மா வெளியீட்டகம், பிறவுன் வீதி, 1வது பதிப்பு, வைகாசி 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

(18), 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-42692-4-8.

இராமச்சந்திரன் சுரேஷ் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் பொருளியற்துறைப் பட்டதாரி. இவர் சமகால நிகழ்வுகளைப் புதிய கவிதைகளாக்கி உணர்ச்சியுடன் அரங்குகளிற் பாடுவதுடன், இவரின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. தனது கவிதைகளைத் தொகுத்து நேரமில்லா நேரம் என்னும் கவிதைத் தொகுதியாக தனது எட்டாவது நூலாக வெளியிட்டுள்ளார். காலப்பெருவெளியில் மணித்துளிகள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஓசையற்று இறக்கிறது நேரம். நேரங்கள் காலமாகிக் கொண்டிருக்க அகாலங்களைக் கடந்து கொண்டிருக்கிறது வாழ்வு. முடிவிலியாகத் தொடரும் பொழுதுகள் ஏதோ ஒரு வரலாற்றைப் பதிவுசெய்து விட்டே ஓடிக்கொண்டிருக்கின்றன. நேரம் காட்டியின் பெரியமுள் ஓயாத இதயத் துடிப்புடன் காலத்தைத் துரத்திக்கொண்டேயிருக்க சிறிய காலமாக நிலைத்து நிற்க முயன்று காலமாகிக்கொண்டிருக்கிறது. மானுட வாழ்வும் அப்படியே. நேரம் போவது தெரியாமல் காலமாகும்வரை இயங்குவது இயற்கை நியதி. அது ஓர் அவசியமான அதிசயமும் கூட.  மானுட இயக்கமென்பது அவனவன் நேரகாலத்தைப் பொறுத்தது என்பது பொதுவான கூற்று.  எனினும் நேரமில்லா நேரத்துடன் போராடி காலத்தை நிறுத்தல் என்பது அசாத்தியமே என்பதை கவிதைகளில் தெளிவுபடுத்துகிறார்.

ஏனைய பதிவுகள்