கெகிறாவ ஸுலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 78 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-64-1.
மதத்தின் பேரால் நிகழும் அடக்குமுறை, அன்பின்மையின் துயரங்கள், யுத்தத்தினால் வரண்டு கிடக்கும் மானுடவெளி, பெண்ணாய்ப் பெண் புரிந்துகொள்ளப்படாமை, நேயம் கலந்த காதலின் தேவை, பிணிகளின் அவலங்கள், புறக்கணிப்பு சாதிக் கொடுமைகள், முதுமையின் கண்ணீர் இன்னபிறவென்று இக்கவிஞரை அழவைத்த கவிதைகளின் கலவையை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. இலகு மொழிநடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் பிறமொழிக் கவிஞர்கள்; தந்ததை அவர்களது பண்பாட்டு கலாசார வேறுபாடுகள், அந்தப் பின்னணியில் அவர்களது உணர்வுக் கோலங்கள் போன்றவற்றை அதி தீவிரமான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட, அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மற்றவர்க்கும் புரிய வைக்கிற மாதிரி எளிய வடிவில் மொழிமாற்றி, அந்தப் புதுச்சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுக்கும் வகையில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அமைந்துள்ளன. வில்லியம் பிளேக் (காதலின் தோட்டம்), ஜோன் கீட்ஸ் (வானம்பாடிக்கான புகழாரம்), W.H.டேவிஸ் (ஓய்வு), D.H.லோரன்ஸ் (அந்தப் பாம்பு), சீக்ப்ரெய்ட் சசூன் (பதுங்குகுழிகளில் ஒரு தற்கொலை), எட்னா சென்ட் வின்சன்ட் மில்லாய் (விருந்து), போல் எல்யூவார்ட் (குவெர்ணிக்கா), பிரிவேத் (காலையுணவு), லங்ஸ்டன் ஹியூஸ் (ஆறுகளைப் பேசும் கறுப்பன், என் மக்கள், கனவுகள்), ஜேம்ஸ் ரீவ்ஸ் (அந்தக் கற்சிலை), டிலான் தோமஸ் (ஒரு பெரு நகரை வீழ்த்திற்று), சில்வா கபுதிக்யான் (பிரிவுகள்), வென் எக்ஸ்சின் (இதயத்தின் தியாகம்), ரவீந்திரநாத் தாகூர் (அந்த ஆலமரம்), மொனிஷ் அல்வி (எவரும் அறியாத ஒரு சிறுமி), நிசிம் எசகீல் (தேளினது இரவு), சிதாகாந்த் மஹாபாத்ரா (பாட்டி), அம்ரிதா பிரீதம் (உனை எப்படியும்), கமலாதாஸ் (ஒரு அறிமுகம், என் பாட்டியின் வீடு), பினா அகர்வால் (சீதை நீ பேசு, வயோதிபம் தழுவுகையில்), ராம் ஷர்மா (மனுஷ உன்னதங்கள்), மார்ஷல் ஹெம்ப்ராம் (ஈட்டியும் வில்லும்), சித்தலிங்கையா (பசுவின் பாடல், என் மக்கள்), உமா கவாய் (கூடு), குல்சார் (அந்தத் தட்டுகை, கண்கள்), பிஸ்னு என். மொஹப்பத்ரா (நீதி), சுர்ஜித் பதார் (என் அம்மாவும் என் கவிதையும்), லீலாதார் மன்ட்லோய் (ஒரு நாள்), புஷ்பா ஆர்.ஆச்சர்யா (பூக்களின் கனவுகள்), லுத்பா சலிமா பேகம் (ஒரு கவிதை), H.K.கவுல் (அந்தக் கற்கோயில்கள்), சுமன் போக்ரால் (தினமும் காலையில்), தரன்னும் ரியாஸ் (அறைகளிலிருந்து வாசற் புறங்களுக்கு), சுதா ராய் (ஒரு பழைய புகைப்படம்), பிஸ்மா (அடியாழத்தே), சந்ராபிர் (நிழலும் சுயநலமும்), மம்தா கிரான் (ஆங்கொரு பசுமரம் இருந்தது) ஆகிய கவிஞர்களின் படைப்பாக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 178ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.