15627 பூவுலகைக் கற்றலும் கேட்டலும்: அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்.

ஆழியாள் (தமிழாக்கம்). புதுச்சேரி 605110: அணங்கு பெண்ணியப் பதிப்பக வெளியீடு, 3, முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், 1வது பதிப்பு, நவம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

74 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-935787-0-4.

மதுபாஷினி (புனைபெயர்: ஆழியாள்) திருக்கோணமலையைச் சேர்ந்தவர். 1992-1997 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவுஸ்திரேலியாவில் 1999 முதல் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி, தற்போது அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவைப் பற்றிய பொதுப் புரிதலுக்கு அப்பால், அதன்  உள்ளாழத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அந்த நிலத்திற்குரிய ஆதிக்குடிகளின் வரலாற்று அவலத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்திக் காட்ட இக்கவிதைகள் துணைபுரிகின்றன. இயற்கையைப் பேணியவாறு தம்மைத் தகவமைத்து வாழும் கலையைக் கொண்டிருந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கை இன்று திகைப்படைந்து திணறுகிறது. அதன் இசைவில் அத்துமீறல்களைச் செய்து, அவர்களுடைய நிலத்தின் மீதும் அந்த நிலத்தின் சிறப்பாக இருக்கும் இயற்கை வளங்களின் மீதும் கைவைத்த வெள்ளையாதிக்கச் சக்திகள், தேசத்தைத் தமக்குரியதாக்கி விட்டனர். இதை ஜனநாயகத் தோற்றத்தைக் கொண்டு உருமறைத்திருக்கின்றனர். ‘ஆதிக்குடிகளுக்கான விசேட சலுகை’ என்ற பேரில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியும், குடிவகை உள்ளிட்டவையும் அந்த மக்களைச் சிந்தனைச் சோம்பேறிகளாகவும் செயற்றிறன் அற்றவர்களாகவும் ஆக்கியுள்ளன. ஆனாலும் வரலாற்று ரீதியாகவும் இயற்பண்பிலும் அவுஸ்திரேலிய அடையாளமும் அதன் தன்மைகளும் கெட்டழிந்து போய்விட்டன. அவுஸ்திரேலிய மண்ணுக்குப் பொருத்தமற்ற தாவரங்களையும் பிற உயிரினங்களையும் வெள்ளையாதிக்கர்கள் கொண்டு வந்து சேர்த்ததன் மூலம் இயல்பழிப்பு பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது. இது உலக நீதிக்கு-இயற்கையின் விதிமுறைக்கு எதிரானது. இதையிட்ட கண்டனமும் இந்த அநீதியை எப்படியாவது வெளியுலகின் முன்னே சொல்லியாக வேண்டும் என்ற உத்வேகமும் ஆதிக்குடிகளின் கவிஞர்களைப்போல, ஆழியாளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆழியாளின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சியின் வழியாக நமக்குக் கிடைக்கும் கவிதைகள், அவுஸ்திரேலியத் தொல்குடிகளின் இருப்புச் சவால்களையும் அவர்களுடைய வரலாற்றுச் சிறப்பையும் அதன் இன்றைய அவல நிலையையும் தெளிவாகச் சித்திரிக்கின்றன. ஆதிக்குடிகளுடன் வெள்ளையினத்தவர் ஊடாடிப் பிறந்த பிள்ளைகள் எந்த அடையாளத்தைப் பின்பற்றுவது என்று தெரியாத தடுமாற்றத்தை இந்தக் கவிதை சொல்கிறது. எந்தவொரு இனச் சமூகத்தினதும் வேரறும்போது அதன் விளைவாக உருவாகும் நெருக்கடிகள் அத்தகைய நிலையைக் கொண்டிருக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவானவையாகி விடுகின்றன. இதற்கு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் விதிவிலக்கல்ல என்பதை இக்கவிதைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஏனைய பதிவுகள்