தாழை செல்வநாயகம். மட்டக்களப்பு: தாழை செல்வநாயகம், பேத்தாழை, வாழைச்சேனை, 1வது பதிப்பு, 2009. (தமிழ்நாடு: ராஜபிரியா ஆப்செட் அச்சகம், வேலூர்-1).
68 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ.
ஈழம் வருகிறான் பாரதி, மந்திர யந்திரம், பிடித்தது பிசாசா?, பார்வதிப் பாட்டி, வாயாடி வாத்தியார், வாத்தியல்ல மந்திரி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆறு நகைச்சுவை நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் நாடகமான ‘ஈழம் வருகிறான் பாரதி’ என்ற நாடகத்தில், மகாகவி பாரதி முக்கியமான பாத்திரமாக வருகிறார். சமகாலப் பிரச்சினைகள் பல இந்நாடகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. ‘மந்திர யந்திரம்’ என்ற நாடகமும் அவ்வாறான சமகாலப் பிரச்சினைகளை அங்கதச் சுவையுடன் முன்வைக்கின்றது. ‘பிடித்தது பிசாசா?’ என்ற நாடகத்தில் இக்கால மூட நம்பிக்கைகள் காட்டப்படுகின்றன. ‘பார்வதிப் பாட்டி’ நாடகத்தில், சமூகத்தில் முதியோர் பற்றிய கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதியோர் தினம் இந்நாடகத்தின் மையப் பொருளாகிறது. ‘வாயாடி வாத்தியார்’ நாடகத்தில் தாழை செல்வநாயகம், நாட்டு நடப்புகளை முன்வைக்கிறார். ‘வாத்தியல்ல மந்திரி” என்ற நாடகம் தமிழகத்தில் மூலிகைகளைக் கொண்டு பெற்றோல் கண்டுபிடித்ததாக நாடகமாடிய ராமர்பிள்ளையின் கதையை நினைவூட்டுகிறது. வாசிக்கும்போதே சிரிக்கவைக்கும் இந்நாடகங்கள், நடிக்கும்போது சபையோரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாடகத்திலும் சமகாலப் பிரச்சினைகளே பின்னணியாக உள்ளன. ஈழத்தில் வீதித்தடைகள் பற்றியும் அதனால் மக்கள் படும் துன்பங்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு, மது போதை முதலிய பல்வேறு பிரச்சினைகள் இந்நாடகங்களில் இழையோடுகின்றன. நாடகங்களில் இடம் பெறும் கிராமியப் பேச்சுத் தமிழும் நகைச்சுவை உரையாடல்களும், யதார்த்த ரீதியாக அமைகின்றன. நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகங்கள் இவை.