எம்.ஏ.அப்பாஸ். கொழும்பு: ஸீனத் வெளியீடு, 118, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 1951. (கொழும்பு 12: கிரௌண் பிரின்டிங் வேர்க்ஸ், 105, புனித செபஸ்தியார் தெரு).
(8), 154 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18×12.5 சமீ.
இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான செயல்களைச் செய்து சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தும் துரோகிகளைக் கண்ணுற்றுக் கொதிப்படைந்த ஒரு மனிதனின் கதை இது. எமது சமூகத்தில் மக்களின் அறியாமையையே ஆதாரமாகக் கொண்டு புனிதம் மிக்க மகான்களின் பெயர்களை மாசுபடுத்திவரும் போலிகளின் தீமையைத் தௌ;ளென விளக்கி, மக்களின் உயர்வுக்கெனவே உயிர்வாழ்ந்து சிறப்படைந்த உத்தம ஞானிகளின் மேன்மைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் உயரிய நோக்குடன் எம்.ஏ.அப்பாஸ் இந்நாடக நூலை எழுதியுள்ளார். புரையோடிக் கிடக்கும் சமூக நோய்களை டாக்டர் பிர்தவுசைக் கொண்டு சத்திர சிகிச்சை செய்திருக்கிறார். டாக்டர் கையாளும் பொறுமையும் திடமும் சமூகத் தொண்டர்களுக்கு நல்வழிகாட்டியாகின்றது. பரீதா-ஷிராஜ்-சுபைதா இவர்களைச் சுற்றி நெஞ்சையள்ளும் பல நிகழ்வுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறைவனின் கருணையைப் பெற்ற அவுலியாக்கள் மக்களின் மதிப்புக்குப் பாத்திரமானவர்கள். தன்னலமற்ற தியாகிகளான உண்மையான ஷெய்குமார்கள் சத்திய இஸ்லாத்தைப் பரப்புவதற்காகத் தமது வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். இவர்கள் போற்றப்படவேண்டியவர்களானாலும், அவர்களை இறைவனுக்கொப்பானவர்களாகக் கருதும் மக்களின் அறியாமையையும், அவர்களிடம் வரங்களைக் கேட்பதுடன் அவர்களது சமாதிகளைப் பூஜிக்கும் அப்பாவி மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த இந்நாடகம் முனைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26873).