யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: கலைச்சோலை, 793 (425), நாவலர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
xiv, 196 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-35664-1-6.
இந்நூலில் கலைஞர் யோ.யோண்சன் ராஜ்குமார் தனது மூன்று தசாப்தகால அரங்க அனுபவங்களின் வழியாகக் கடந்த 20 ஆண்டு காலத்தில் பிறந்த பல நாடகங்களுள் தேர்ந்த ஏழு நாடகங்களை இடம்பெறச்செய்துள்ளார். இவை ஜீவ பிரயத்தனம், அகலிகைகள், வலசைப் பறவைகள், மண விலங்குகள், ஈன்ற பொழுதில், உண்மையின் ஒளி, ஸ்பாட்டக்கஸ் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டவை. புலம்பெயர் உறவுகளுக்குத் தமது இருப்பைச் சொல்வதற்காக எழுதப்பட்ட ‘ஜீவ பிரயத்தனம்’ நாடகம் 1998இல் திருமறைக் கலாமன்றம் மேற்கொண்ட வடலிக்கூத்தர் ஐரோப்பிய கலைப் பயணத்திற்காக தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டது. ‘வலசைப் பறவைகள்’ நாடகம் 1996இல் இடப்பெயர்வுக் காலத்தில் தென்மராட்சியில் தவசிகுளம் இளையோருக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. இடப்பெயர்வுக் காலத்தில் மக்கள் அனுபவித்த பல்வேறு மனவிகாரங்களை இப்பிரதி பேசுகிறது. ‘ஈன்ற பொழுதில்’ நாடகம் 1996இல் இடப்பெயர்வின் பின் குடா நாட்டுக்குள் மீளவும் குடியேறிய காலத்தின் தாய்மாரின் அச்சங்களையும் ஏக்கங்களையும் உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடாக அமைந்திருந்தது. வரலாற்று நாடகமான ‘ஸ்பாட்டக்கஸ்’ 2002இல் திருமறைக் கலாமன்றத்தின் திறந்தவெளி அரங்கில் பிரம்மாண்டமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மேடையேற்றப்பட்டது. ஒரு ஆசிரியையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘மண விலங்குகள்’ திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகளுக்காக ‘இல்லறச் சிறைகள்’ என்னும் பெயரில் 2003இல் எழுதப்பட்டு, பின்னர் 2016இல் மீளுருவாக்கமாக எழுதப்பட்டது. புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் ஆற்றாமையோடு எழுதப்பட்ட ‘அகலிகைகள்’ நாடகம் 2017இல் யா/திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகளின் தமிழ்மொழித் தினப் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்டது. இலக்கியப் பெண் பாத்திரங்களுடன் சமகாலப் பெண்களின் துயரத்தினையும் ஒன்றிணைத்துப் பார்த்த படைப்பு இது. ‘உண்மையின் ஒளி’ நாடகம் 2001ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அக்காலத்துப் பொய்மையான அரசியல் சூழமைவும், தருணத்திற்குத் தக்கபடி வாழ நினைக்கும் எமது சமூகத்தின் மனநிலையும் ஏற்படுத்திய எதிர்வினையில் இருந்து எழுந்தது.