மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (திருக்கோணமலை: பென் விஷன் (Ben Vision) அச்சகம், 87, பிரதான வீதி).
vii, 87 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41569-0-6.
திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.ஏ.அனஸ் அவர்கள் நபிகள் நாயகத்தை சிறப்பித்து இக் காவியத்தைப் படைத்துள்ளார். காவியம் ஒன்றைப் பாடுவது அதிலும் குறிப்பாக நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு காவியம் பாடுவது மிகவும் கடினமான செயலாகும். இதனை நூலாசிரியரே 4ஆவது பாடலில் ‘தான் பனித்துளி போன்று சிறியவன் என்றும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பெருங்கடல் என்றும்’ அவையடக்கத்துடன் குறிப்பிடுகிறார். பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையை பூரணமாகக் கூறுவது ஒரு காப்பியத்துக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும். நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைப் பகுதியினை இக்காவியம் நன்கு விபரிக்கின்றது. 18ஆவது பாடலில் ‘பெருமானார் நபி முகம்மது புவியிலே பிறந்தார்’ என்றும் 584ஆவது பாடலில் ’திருநபியும் தம்வாழ்வை தரணியிலே முடித்தார்’ என்றும் பாடுகின்றார். நபிகள் நாயகத்தின் இளமைக் காலத்தையும், திருமண வாழ்க்கையையும் மக்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான பணிகளையும் நூலாசிரியர் இக்காவியத்திலே சிறப்பாகத் தருகின்றார்.