15657 படகு மூழ்கிய காவியம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: உமர் நெய்னார் புலவர் கழகம், மட்டக்களப்பு வீதி, பெரியபுலம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-44598-5-4.

திருமலையில் இருந்து மூதூர் வரையிலான சுமார் எட்டு கிலோ மீற்றர் தூரமான கடல் பரப்பில் அக்காலம் தொட்டு தமது போக்குவரத்தை மக்கள் மரக்கலங்களினாலான படகுகள் மற்றும் சிறிய மோட்டார் படகுகள் மூலமே தினமும் மேற்கொண்டு வந்துள்ளனர். இக்கடல்வழி போக்குவரத்தானது முதியோர்களின் கருத்துப்படி சுமார் 75 வருட காலத்திற்கு மேல் இடம்பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. காலையில் மூதூரில் இருந்து வைத்தியசாலை, அரச அலுவலகம், வர்த்தக பொருள் கொள்வனவு, வெளியூர் பயணங்களுக்கான போக்குவரத்து, சிறு வியாபாரங்களுக்கென திருமலைக்கு பயணிப்பவர்கள் மாலையில் மீண்டும் திருமலையில் இருந்து மூதூர் திரும்புவது வழமை. 25.01.1993 அன்று திருக்கோணமலையிலிருந்து மூதூர் நோக்கி மாலை 2.30 மணிக்கு 107 பயணிகளுடன்  புறப்பட்ட மோட்டார் படகு, துறைமுகத்தை விட்டு வெளிக்கடல் பகுதியான பாதாள மலைப் பிரதேசத்தில் கடுமையான கொந்தளிப்பின் காரணமாக மூழ்கியது. இச்சந்தர்ப்பத்தில் தக்வாநகர், பஹ்ரியாநகர், சம்பூர் பகுதி கரையோர மீனவர்களின் மீன்பிடிப் படகுகள், கடற்படையினரின் இயந்திரப் படகுகள் மற்றும் சிறிய தோணிகள் எனப் பல படகுகள் புறப்பட்டுச் சென்று கடலில் தேடுதல் நடத்தின. அதிலிருந்த 59 பயணிகள் மரணித்த நிலையில் 13 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. 48பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தத்தளித்த நிலையில் பயணிகள் சிலர் காப்பாற்றப்பட்டனர். இந்த அவல நிகழ்வு ‘மூதூர் படகு விபத்து’ என்று வரலாற்றில் பதியப்படுவதாயிற்று. இவ்விபத்தினைக் காவியமாக்கியிருக்கிறார் கவிஞர் அனஸ்.

ஏனைய பதிவுகள்