தெ.ஈஸ்வரன் (இயற்பெயர்: தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன்). சென்னை 17: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜ{லை 2013. (சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணா சாலை).
136 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
கொழும்பில் ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமது தந்தையின் நேரடி வழிகாட்டலில் தொடங்கிய ஈஸ்வரன் அவர்கள் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்துறையில் பிரபலம் மிக்கவர். தெ.ஈஸ்வரனின் கன்னி முயற்சியாக இச்சிறுகதைத் தொகுப்பு அமைகின்றது. இந்நூலில் அழைத்தால் வருவாள் அன்னை மேரி, பிறந்த நாளன்று பூகம்பம், அவசரப் புத்தி, நன்றி ஒருவருக்குச் செய்தக்கால், அவன் தானா? இறைவன் தவறுவதில்லை, தொப்புள் கொடி உறவு, என்றும் மகிழ்ச்சி, வெந்த புண்ணில் வேல், வேண்டுகோள், குட் நைட் டார்லிங், மாறியது நெஞ்சம், அன்பு எங்கே, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல, விரும்பி வாங்கிய தலைவலி, இரு பார்வைகள் ஆகிய 16 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பிறந்த நாளன்று பூகம்பம் என்ற கதை தவிர மற்றவை அனைத்தும் தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அழைத்தால் வருவாள் அன்னை மேரி- தெய்வ நம்பிக்கையை ஊட்டுகின்றது. ஆதித்தியாவின் பிரார்த்தனை பலிக்கின்றது. பிறந்த நாளன்று பூகம்பம் மானிட சபலத்தைக் காட்டுகின்றது. அவசர புத்தி- கவிதாவின் இறுமாப்பை வெளிப்படுத்துகின்றது. கடன் கொடுத்தார் நெஞ்சம் என்ற கதையில் வரும் கருணாவைப் போன்றவர்கள் சமூகத்தில் இன்னும் இருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்கிறது. கதாசிரியர் ஒரு மேடைப் பேச்சாளர் என்பதால், சில கதைகளில் அதன் பாதிப்பு துலக்கமாக இருக்கின்றது. கட்டுரை போலவும், மேடைப்பேச்சுப் போலவும் அமைந்து சில கதைகள் நெருடலாக உள்ளன.