கே.ஆர். டேவிட் (இயற்பெயர்: கிரகொரி இராயப்பு டேவிட்). யாழ்ப்பாணம்: கே.ஆர். டேவிட், பூபாளம், பிடாரி கோவில் வீதி, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
xxii, 666 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-624-95522-0-3.
கடந்த 47 ஆண்டுக் கால (1971-2019) சமூக இயங்கியலின் உள்ளுறைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கே.ஆர்.டேவிட் எழுதிய 60 சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். ஆண்டுவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள இக்கதைகள் ஈழத்துப் படைப்பாளர்கள் அறுவரின் மனப்பதிவுகளுடன் வெளிவந்துள்ளது. அவ்வகையில் 1971-1975 காலகட்டத்துக்குரிய முதல் பத்துக் கதைகளையும் தெளிவத்தை ஜோசப் திறனாய்வு செய்துள்ளார். 1976-1982 காலகட்டத்துக்குரிய 10 கதைகளை ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரனும், 1982-1997 காலகட்டத்துக்குரிய 10 கதைகளை மு.சிவலிங்கமும், 1998-2009 காலகட்டத்துக்குரிய 10 கதைகளை மு.அநாதரட்சகனும், 2010-2014 காலகட்டத்துக்குரிய 10 கதைகளை முன்வைத்து க.பரணீதரன் அவர்களும், 2014-2018 காலகட்டத்துக்குரிய 10 கதைகளை முன்வைத்து கே.ரீ.கணேசலிங்கமும் திறனாய்வு செய்து தமது மனப்பதிவுகளாக எழுதியுள்ளனர். ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் கே.ஆர்.டேவிட்டுக்குத் தனித்துவமான ஒரு இடம் உள்ளது. புதினம், குறும்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். இவரது ‘எழுதப்படாத வரலாறு’ என்ற சிறுகதை தரம் எட்டுக்குரிய ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’ பாடநூலில் இடம் பெற்றுள்ளது. கே.ஆர்.டேவிட் சாவகச்சேரி பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.