இணுவிலான் சிகாகோ பாஸ்கர். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, மார்ச் 2020. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-62-45018-08-8.
தன்னிலையை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. முன்னொரு காலத்தில் இணுவில் பகுதியில் பிரபல்யமாகியிருந்த தெருவோரப் புளியமரம் இக்கதைத்தொகுதியின் தலைப்பாகியுள்ளது. அபிவிருத்தி என்ற போர்வையின்கீழ் அந்த மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டபோதிலும், தனது சிறுகதைத் தொகுப்புக்குச் ‘சீனிப்புளியடி’ எனத் தலைப்பிட்டு எமது ஊர்பற்றிய பழைய ஞாபகங்களை ஆசிரியர் இரைமீட்க முனைந்துள்ளார். சிகாகோவில் இருந்தாலும் பாஸ்கரின் வேர்கள் இன்னும் தனது ஊர்மண்ணில் ஊன்றிக் கிடப்பதனால்தான் அவர் சிந்தனையும், செயற்பாடுகளும் தன் கிராமத்தை வட்டமிட்டபடியே இருக்கின்றன. அந்தப் புளியமரத்தினடியில் கேட்ட கதை, பாக்கை இடித்தபடி பாட்டி சொன்ன கதை, சோற்றை ஊட்டியபடி தாய் சொன்ன கதை, கோயில் பிரசங்கத்தின்போது கேட்ட கதை, வேலிக்குப் பின்னால் ஒழிந்திருந்து ஒட்டுக் கேட்ட கதை, பயணத்தின் போது வீதியில் கேட்ட கதை, வகுப்பில் ஆசிரியர் சொல்லக் கேட்ட கதை, இளவயது அனுபவத்தில் பெற்ற ‘சென்சார்” கதை, பத்திரிகையில் படித்த கதை, நாடகம், சினிமா மற்றும் தொலைக் காட்சியில் பார்த்து இரசித்த கதை, மேடைப் பேச்சாளர் முக்கி முழங்கிய கதை என ஏராளமான கதைகளை ஒன்று திரட்டி எழுதப்பட்ட கதைகளை ஒரு தொகுப்பாக தந்திருப்பதாக தனது உரையிலே பாஸ்கர் குறிப்பிடுகிறார். இவை கம்பிவேலிக்குள் கசங்கிய கவிதை, முதுமையின் பயம், கள்ளத்தால் விளைந்த கருவல்ல, சிந்தை விட்டகலாத சீனிப்புளியடி, ஒரு மாவீரனின் தணியாத தாகம், என் பெயர் செண்பகம், பேரழிவின் நினைவுமரம், மணிக்கூண்டுக் கோபுரத்தின் மனக்குமுறல், மண்ணின் நினைவோடு ஒரு காரின் கண்ணீர்க் கதை, முட்கம்பி வேலிக்குள் முகிழ்ந்த ஞானம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்துக் கதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67056).