15741 மாமி இல்லாத பூமி: சிறுகதைத் தொகுப்பு.

மருதமுனை ஏ.ஆர்.அப்துல் ஹமீட். மருதமுனை 02: மனாஸ் பதிப்பகம், இல. 52 A, அல் மனார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (அக்கரைப்பற்று: நியு ரிச் ஓப்செட் பிரின்டர்ஸ்).

viii, 107 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-41632-0-1.

ஆசிரியர் பல்வேறு ஊடகங்களிலும் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் அபச்சுரங்கள், பூக்கும் பாரங்கள், தோலும் பல்லாக்கும், ஒரு துண்டும் நானூறு ரூபாவும், அறுதியாகும் உறுதிகள், விண்ணப்பம், விலகும் போர்வைகள், மாமி இல்லாத பூமி, சமூக முரண்பாடுகள், சிந்தனைச் சுனாமி, வாசமில்லா மலர்கள், தூங்காத துயரங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. இவரது கதைகளில் அன்றாடம் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவனது தேவைகள், மனிதன் தன் சக மனிதனை நோக்கும் விதம் எனப் பெரும்பாலும் அவனது வாழ்வம்சங்களையே அடிப்படையாகக்  கொண்டு புனையப்பெற்றுள்ளன. ‘மாமி இல்லாத வீடு” என்ற தலைப்புக் கதை, தனது மாமியைத் தாயாக மதிக்கும் ஒரு மனிதனின் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. மாமியின் மரணச் சடங்கிற்கு வரமுடியால் போனதால் பிறகு வந்து, மாமியை நினைத்துக் கண்ணீர் விடுவதாகக் கதை நகர்கின்றது. ‘அபச்சுரங்கள்’ என்ற கதை ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கை பற்றியும் ஒரு கணவன் தன் மனைவிமேல் கொண்டுள்ள அன்பு, தந்தை மகனுக்கிடையேயான பிணைப்பு என்பன பற்றிப் பேசுகின்றது. இத்தொகுதியில் உள்ள ‘ஒரு துண்டும் நானூறு ரூபாவும்’, ‘தூங்காத துயரங்கள்’ ஆகிய கதைகள் பரிசுபெற்ற கதைகளாகும். ‘அறுதியாகும் உறுதிகள்’ என்ற கதையில் தாய் வெளிநாட்டுக்குச் சென்றதால் பிள்ளைகளைப் பராமரிக்க தந்தை படும் கஷ்டங்களையும் கடன் ஏற்படுத்தும் மன உளைச்சல்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். இறுதியில் எம்மால் தாங்கக்கூடிய கஷ்டங்களையே இறைவன் எம்மீது சுமத்துவான் என்று முடிக்கிறார். இவரது கதைகள் கிராமியப் பண்போடு ஒன்றிணைத்துப் புனையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஏனைய பதிவுகள்