எஸ்.ஜோன்ராஜன். அக்கரைப்பற்று: தேவ் ஆனந்த் வெளியீட்டகம், விகாரை வீதி, 1வது பதிப்பு, ஆனி 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
(4), 265 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-42565-1-4.
வாகரைப் பிரதேசத்து மாங்கேணிக் கிராமத்தைக் களமாகக் கொண்டு, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் அரச உத்தியோகத்தராக அங்கு தங்கியிருந்து கடமை புரிகின்ற ஒருவரது பார்வைக்கு ஊடாக ‘ஒரு கிராமத்து அத்தியாயம்” நமது மனக்கண்ணில் உயிர்கொண்டு வளர்கின்றது. ஆயுத தளபாட வியாபாரத்தை வல்லரசுகள் இலங்கைக்குள் விரிவாக்கம் செய்ய முனையும் முன்னர், யுத்தமற்ற ஒரு மண்ணில் இக்கதை நிகழ்கின்றது. போருக்கு முந்திய வாழ்வனுபவங்களைக் கொண்டு போருக்குப் பின்னரான அனுபவங்களுடன் வாழும் இக்காலத்தில் இந்நூல் தரும் வாசிப்பனுபவம் பல்பரிமாணம் கொண்டது. மாங்கேணிக் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வேடர் சமூகத்தினர், அவ்வாறே வாகரை பிரதேசத்தில் காயான்கேணி முதல் வெருகல் வரையிலான பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்த வேடர் சமூகத்தினர் மத்தியில் காணப்படுகின்ற உறவுகள், ஊடாட்டங்களின் வலிமையினைக் கவனிப்பிற்கு உட்படுத்துகின்றது. மேலும் இந்நாவல் வானொலியும் பெரும்பாலும் அறிமுகப்படாத ஒரு கிராமத்தைச் சித்திரிக்கிறது. கடற்றொழில் கூட்டுத்தாபனம் அங்கு இருப்பதன் காரணமாக வயர்லெஸ் ரேடியோ இருக்கவேண்டி வருகிறது. பூர்வீகமாக அங்கு வாழும் வேடர் சமூகத்தினர், மற்றும் மீனவ சமூகத்தினர், அடிநிலைக் கூலித் தொழிலாளிகளான மலையக மக்கள், சிறு வியாபாரம் செய்யும் மற்றும் வாடி முதலாளிகளான முஸ்லீம்கள், பருவகாலக் கடற்றொழிலுக்கு வந்து போகும் புத்தளம், நீர்கொழும்புப் பிரதேசத்து மீனவர்கள். காலையும் மாலையும் மட்டும் வந்து போகும் பழைய பேருந்துகள், தாம் ஏற்றிச் செல்லும் மீன்களுடன் பல சந்தர்ப்பங்களில் மரங்களையும் கடத்திச்செல்லும் லொறிகள் என இந்நாவலில் பல்வேறு பாத்திரங்களும், சம்பவங்களும் ஆங்காங்கே உயிர்த்தெழுந்து இயங்கத் தொடங்கி எம்மை காலப் பயணத்திற்கு (Time Travel) உட்படுத்துகின்றன. அரச இலக்கிய விருதினை 2018இல் பெற்ற இந் நாவல், முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகவும் வெளிவந்தது.