சி.வை.தாமோதரம்பிள்ளை (மூலம்), ப.சரவணன் (பதிப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்).
312 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-03-7.
யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து, தன்னந்தனியாகத் தமிழ்ப் புதையலைத் தேடித்திரிந்து தமிழ் மக்களுக்குத் தரும் அரிய, பெரிய முயற்சியில் ஈடுபட்டவர் ஈழத்தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். தமிழகத்தார் போற்றும் உ.வே.சாமிநாதையருக்கும் முன்னரே இவரது பணி வரலாற்றில் பதிவுபெற்று அவரை பதிப்புலகின் தலைமகன் ஆக்கிவிட்டது. மேலும், அக்காலத்தில் ஏட்டுப் பிரதிகளைப் படித்துப் பிழையின்றி எழுதித்தரும் திறமையுள்ளவர் கிடைப்பதே அரிது. இதனால் அவரே ஏடுகளைப் படித்துப் பார்ப்பதுடன், நகல் எடுத்துப் பொருள் ஆராய வேண்டிய பணியிலும் ஈடுபட்டார். செந்தமிழ் நடையில் இலக்கிய நயத்தோடு தான் பதிப்பித்த நூல்களுக்குத் தானே எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் தனியானதொரு இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் தன் பதிப்புரைகளில் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச் சுவையும் மிகுந்தவை. சி.வை.தா. அவர்களின் நூல்களின் பதிப்புரைகளைத் தொகுத்துத் தரும் முயற்சி இதுவாகும். ப.சரவணன், சென்னை மாநகராட்சிப் பள்ளியொன்றில் முதுநிலைத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.