15907 தாங்கொணாத் துன்பம்(நினைவுக் குறிப்பு).

சதாசிவம் ஜீவாகரன் (தொகுப்பாசிரியர்). கனடா: அர்வின் ஜீவாகரன், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

129 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

ரொரன்ரோ கனடாவில் நவம்பர் 13ம் திகதி இந்நூல் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலை அமைப்புக்களில் ஒன்றான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (PLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (NLFT) போன்ற அமைப்புக்களின் முன்னணி போராளி அன்ரனின் (விவேகானந்தன், 16.09.1957-02.02.1993) நினைவுகளை உள்ளடக்கியதாக இந்தப் புக்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. இவர் 14.09.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைதுசெய்யப்பட்டு 02.02.1993 அன்று விசாரணையின் பின் கொலைசெய்யப்பட்டவர். அன்ரனின் சக போராளியான ஜீவாகரன் சதாசிவம் என்பவரினால் தொகுக்கப்பட்ட இந்நூல் முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு விமர்சனக் கூட்டமும் நடைபெற்று இருந்தன. இதனைத் தொடர்ந்து கனடாவில் இதே நிகழ்வு நடாத்தப்பட்டது. அவ்வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டது. யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னருமான துன்பங்களினதும் துயரங்களினதும் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதனை தாங்கொணாத் துன்பம், அவ்வலிகளின் வடுக்களாகத் தோன்றியிருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பவற்றின் வரிகளை வார்த்து, ஜீவாகரன் அவற்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். இந்நூலில் சில உண்மைச் சம்பவங்களையும் இணைத்துப் பதிவுசெய்துள்ளார். ஒரு வாக்குமூலம் (சாந்தி விவேகானந்தன்), ஏக்கம் (சாந்தி), ஆயுதக் கவர்ச்சியினால் போராடப் புறப்பட்டவரல்ல அன்ரன் (சா.தியாகலிங்கம்), அன்ரன் சந்திக்கவைக்கப்பட்டார் (சண்முகம் சுப்பிரமணியம்), விவேகானந்தன் (ஆ.முரளிதரன்), பாசிசம் பலிகொள்ளும் ஒவ்வோர் உயிரும் உயர்ந்தது பெறுமதி மிக்கது நினைவுகூரப்படவேண்டியது (எஸ்.மனோரஞ்சன்), மண்டையர் (சாந்தி), விநோத நாடும் விநோதமான சகோதரர்களும் (சேந்தன்), நாம் துரோகிகள் (சாந்தி), பாசிசத்தின் புரிந்துணர்வு (திருவருள்), கொலைகளையே மேன்மையாக்கி புனிதர்களாகியவர்கள் (சதாசிவம் ஜீவாகரன்), ஏமாற்றம் (சாந்தி), கடிதங்கள் ஆகிய ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்