சிவா தியாகராஜா (மூலம்), சந்திரவதனா செல்வகுமாரன், சந்திரா ரவீந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg 29, 74523 Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (ஜேர்மனி: Stuttgart).
(14), 15-84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
திருமதி சிவா தியாகராஜா (23.04.1934) ஈழத்தில் பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது முழுப்பெயர் சிவகாமசுந்தரி. 1998இலிருந்து ஜெர்மனியில் வாழ்ந்துவரும் இவர் 1999இலிருந்து தமிழாலய ஆசிரியராகப் பணியாற்றி புலத்திலும் தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தவர். தேசப்பற்று மிகுந்த இவர் தனது எட்டுப் பிள்ளைகளில் மூவரை ஈழவிடுதலைப் போருக்கு ஈந்தவர். ஈழத்திலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனிக்கு வந்த பின்பும் தொடர்ச்சியாக ஈழமண்ணின் விடுதலைப் போராட்டப் பணிகளில் பெரும்பங்காற்றியவர். வீரத்தாய், நெஞ்சுறுதி கொண்ட எங்கள் அம்மா (போராளி றியோ நிலவனின் முன்னுரை), என் கனவுகளிலும் நினைவுகளிலும், என் அன்பு மகன் சபா, தென்பாண்டிச் சீமையிலே (லெப்டினன்ட் வெங்கடேஷ் நினைவாக), முன்னம் வந்துதித்த மூத்த செல்வம் (பிறேமராஜன்), அப்பா (என் அன்புக் கணவர்), எங்கு சென்றாய் என்னை விட்டு, பெத்தம்மாவும் பெத்தப்பாவும், ப்ரிய பரதா, மண் காக்கப் புறப்பட்டு விண்காக்கும் மொறிஸ், வீர சுவர்க்கம் எய்திய வீரமறவன் மொறிஸ், ஓ மொறிஸ் மாவீரனே, நம் அருமைச் செல்வமே பரதா, நம் அன்புச்; செல்வமே பரதா, அன்புச் செல்வமே ராஜன், எம் செல்வமே மயூரா, எம்மினிய மயூரனே ஆகிய தலைப்புகளில் இத்தாயின் இதயத்தில் எழுந்த தாய்மையின் மலரும் நினைவுகளில் 18 பதிவுகள் அத்தாயின் இரு புதல்விகளால் தொகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு உணர்வுபூர்வமான பக்கத்தை இதிலுள்ள அனுபவ வரிகள் வெளிச்சமிட்டுள்ளன.