ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், நாவலர் கோட்டம், வண்ணார்பண்ணை, 4வது பதிப்பு, ஏப்ரல் 1932, 1வது பதிப்பு, 1884. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்).
(4), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
காளிதாசர் இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன. காளிதாசன் சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக் குறிப்புகள் அறியப்படவில்லையாயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறன. இவர் குப்தர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. நூலாசிரியர் முத்துத்தம்பிப்பிள்ளை, 1858ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதியன்று பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை மானிப்பாயிலேயே பெற்றுக்கொண்ட இவர், பின்னர் பேர்சிவல் பாதிரியாரால் நிறுவப்பட்ட, தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என வழங்கப்பெறும் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் இணைந்து கொண்டார். அக்காலத்தில் அப்பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றுப் பெரும் புலமை மிகுந்து விளங்கினார். இலங்கைச் சரித்திர சூசனம் (1886), அபிதான கோசம் (1902), பாரதச் சுருக்கம் (1903), நன்னூல் இலகுபோதம் (1904), ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907), சிவிலியன் தமிழ் இலக்கணம் (1911), யாழ்ப்பாணச் சரித்திரம் (1912), நன்னூல் உதாரண விளக்கம், தென்மொழி வரலாறு (1920) எனும் நூற்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். கைலாயமாலையினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1907ம் வருடத்தில் வெளியிட்டிருக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12937).