சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
சமூக விஞ்ஞான ஆய்வு மையம், மாதந்;தோறும் வெளியிட்டுவரும் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 11ஆவது பிரசுரமாக இது வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 31 வருடங்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் அதனை மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதற்கு இந்நூல் உதவுகின்றது. இலங்கை -இந்திய ஒப்பந்தம் தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழர்களின் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகளவானவை. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் உருவான தமிழர் அரசியல் போராட்டத்தினை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட, எந்தவித சுயாதீனமும் இல்லாத மாகாண சபைக்குள் குறுக்கியமை, இவ்வொப்பந்தத்தின் மிகப்பெரிய விளைவாகும். விடுதலைக்காகப் போராட முன்வந்த விடுதலை இயக்கங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய அனைத்தினதும் செயற்பாட்டையும் முடக்குவதில் இவ்வொப்பந்தம் பாரிய பங்கினை ஆற்றியுள்ளது. மறுபுறம், பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒப்பந்தம் செய்வதற்குப் பதிலாக, இந்தியா தமிழ் மக்களின் இறைமையை பறித்தெடுத்து, தானே ஈழத் தமிழ் மக்களின் சார்பில் ஒப்பந்தம் செய்திருந்தது. பலவந்தமாக தானே தமிழர்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பினையும் ஏற்றிருந்த போதிலும் அதிலும் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு விசுவாசமாக இருக்கவில்லை.