மு.சி.கந்தையா. கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2015, 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை 1: மாணவர் நகலகம்).
240 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89867-98-9.
இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களின் (இந்திய வம்சாவழித் தமிழர்) வரலாறு நெடுந்துயரம் நிறைந்தது. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் முன்னோர்களின் வாழ்க்கையில், அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களை குறிப்பிட்ட சொற்களுக்குள் அடக்கி விடமுடியாது. நவீன வாழ்க்கைச் சாலையில் மனித சமூகங்கள் பயணிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பெருந்தோட்டக் கட்டமைப்பில் அதிக மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை . தினக் கூலிகளாக உழைக்கும் இவர்களுக்கு வழங்கும் ஊதியம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை குறைந்த அளவு நிறைவு செய்து கொள்ள வேண்டுமென்றாலும் அதன் தொடக்கப் புள்ளியும் எட்டாத் தொலைவில் உள்ளது. இந்நிலையில் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது தமிழகத்தில் வாழ்கின்றவருமான ஆசிரியரின் இந்நூல் கவனத்துக்குரியது. மூன்று பகுதிகளில் விரியும் இந்நூலின் முதற் பகுதி 1817-1920 காலகட்டத்துக்குரியது. இதில் ஐரோப்பியர் காலம், குடியேறிய காலம், 1820-1980 கோப்பி, தேயிலை, இரப்பர் உற்பத்தி, பெருந்தோட்ட கட்டமைப்பு, மதுவும் தொழிலாளர்களும், காலனிய நிழலில் முதலாளியம், சிறு தொழில் உதயம், அதிகார கட்டமைப்பு, அரசகளின் வாக்குறுதி, தலைமுறைகளுக்குப் பின், அரசு அதிகாரிகளின் வருகை, தொடக்ககால மலையகம் ஆகியவை பற்றிப் பேசுகின்றது. இரண்டாம் பகுதி 1917-1920 காலகட்டத்திற்குரியது. இதில் அரசியல் பிரவேசமும் எதிர்ப்பும், தோன்றத் தவறியது தேசிய இயக்கம், தொழிற்சங்கத்தின் தோற்றம், இலங்கை இந்திய காங்கிரஸ், இவர்களின் பார்வையில், மந்திரி சபையில், விடுதலையும் குடியுரிமையும், தொண்டமானும் குடியுரிமையும், மலையகத்தில் இந்திய தேசியம், வாழ நினைத்தவர்கள், சிரிமா-சாஸ்திரி உடன்படிக்கை, சிரிமாவோ பார்வையில் மலையகம், காலாவதியான உடன்படிக்கையும் தீர்வும், தேசியமும் மலையக மக்களும் ஆகிய தலைப்புகளில் வரலாற்றுத் தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதி 1970-2015 காலகட்டத்துக்குரியது. இதில் 1970க்குப் பின் மலையகத்தவர் எதிர்கொண்ட பிரச்சினைகள், இந்திய விரிவுபடுத்தும் பரப்புரை, தேசியம், பேரினவாத சேற்றில் இடதுகள், இனவன்முறைக்கு மலையகம், வடக்கு அரசியலில் தொண்டமான், சிங்களவர்கள் கண்ணுக்குத் தெரியாத பகைவர்கள், ஈழ விடுதலை இயக்கங்களும் மலையகமும், கொத்தடிமை அடையாளங்கள், சரணடைவு அரசியல், வறுமையும் மலையகமும், முரண்பாடுகள், சிதறடிக்கப்பட்டவர்கள், கொத்தடிமைக் கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் மலையக மக்களின் அண்மைக்கால வரலாற்றைப் பதிவுசெய்கின்றது. இறுதியில் நேர்காணல், ஆதாரச் சான்றுகள், உயிர்நீத்த தியாகிகள், தாயகம் திரும்பியோர் குடியேறிய மாவட்டங்கள் ஆகியன இந்நூலை பூரணமாக்குகின்றன. பின்னிணைப்பாக இரண்டாம் உலகப் போரில் மரண ரயில்வே திட்டத்தில் தப்பிப் பிழைத்தவரின் கதை என்ற தலைப்பில் வெளிவந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.