எஸ்.ஓ.கனகரத்தினம்.(ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 147 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-685-4.
1921ஆம் ஆண்டு Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த இந்நூல் 100 ஆண்டுகளின் பின்னர் தமிழில் வெளிவருகின்றது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் மட்டக்களப்பின் நிலைமைகளை விபரிக்கும் இந்நூல், இன்றைய அம்பாறை மாவட்டத்தையும் உள்வாங்கியிருந்த அன்றைய மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான நிலத்தோற்றம், பௌதிக இயல்புகள், புராதன வரலாறு, நவீனகால வரலாறு, அரசியல் வரலாறு, தொல்லியல், சனத்தொகை: இனங்களும் சாதிகளும், சமயமும் கல்வியும், காலநிலை, சுகாதாரம், நீர்ப்பாசனம், தொழிற்றுறை போக்குவரத்து வழிகள், காட்டு மிருகங்களும் தாவரங்களும், நிர்வாகம், வழக்காறுகளும் சடங்குகளும், பண்டிகைகளும் விழாக்களும், நினைவு கல்வெட்டுக்கள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளின் வழியாகப் பல விடயங்களைத் தருகின்றது. சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம் (1880-1938), மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காரைதீவு கிராமத்தில் பிறந்தவர். மட்டக்களப்பு புனித அன்ட்றூஸ் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்றவர். இலங்கை எழுதுவினைஞர் சேவையில் இணைந்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உதவி நிதியாளராகவும், அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான பிரதான முதலியாராகவும் பணி உயர்வு பெற்றவர். அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் 1936ஆம் ஆண்டு அரசாங்க சபைத் தேர்தலில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கை அரசாங்க சபை உறுப்பினராக விளங்கியவர்.