வடகோவை வரதராஜன். ஏறாவூர்: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 96 பக்கம், விலை: ரூபா 500., இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5816-22-4.
குண்டகசாலை விவசாயக் கல்லூரியின் விவசாயப் பட்டதாரியான வடகோவை வரதராஜன், தனது அரச பணி ஓய்வின் பின்னர், கொரொனா உள்ளடங்கு காலத்தில் மக்களைத் தெம்பூட்டவும் விவசாய முயற்சிகளை முன்னெடுக்கவும் இம்மெய்ப் புனைவுப்பாணி பத்தி எழுத்துகளுக்கூடாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். விவசாயத் தகவல்களை கட்டுரைகளின் வடிவில் தராமல் நகைச்சுவைச் சிறுகதை வடிவில் வழங்கியிருக்கிறார். இந்நூல் முழுதும் விரவிக் கிடக்கும் அங்கதமும் சுய எள்ளலும் வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பதோடு, விவசாய, கால்நடை வளர்ப்புப் பற்றிய அறிவையும் புகட்டுவதாயுள்ளது. கறணைப் பயிர்ச்செய்கையும் விதானையார் வீட்டுக் கருங்காலியும், நளினச் செல்லையரும் உளுந்துப் பயிர்ச் செய்கையும், மரவள்ளி மடையன், மரவள்ளிச் செய்கையும் செல்லையா அண்ணன் அடியில் கட்டிப்போட்ட உரமும், நளினச் செல்லையரும் மஞ்சள் பதப்படுத்தலும், காலை முறித்த செல்லையரும் மஞ்சள் பயிர்ச்செய்கையும், விதானையார் மனைவியின் கௌரி காப்பு விரதமும் நளினச் செல்லையரின் வத்தாளைப் பயிர்ச்செய்கையும், கள்ள விதானையும் கள்ள நாய்களும், மிளகாய்ச் செய்கையும் நளினச் செல்லையரின் நாறிய பையும், புயலால் வரும் வாழை அழிவைத் தடுத்தலும் பர்வதம் மாமியின் கோபமும், வீட்டுத் தோட்டச் செய்கைக்கான குறிப்புகள், வேளாண் செய்முறைகளில் உயிர் உரங்களும் செயற்கைப் பசளைகளும், செயற்கைப் பசளை இல்லாத விவசாயம் சாத்தியமானதா?, இயற்கை விவசாயம் என்னும் இனிப்புக் குளிகை, உணவுப் பழக்கங்களில் மாற்றமும் பறியாப் பரமுவின் ஒற்றைச் செருப்பும், கலப்பினப் பசுக்களும் இந்தியப் பசுக்களும், கால் முறிந்த விதானையாரும் தோழரின் கொம்யூனிசப் பாய்ச்சலும், அண்ணியார் மாட்டொடு மாடாய் வளர்க்கும் பசுவும் பால்மா கொம்பனிகளின் வருகையும், சமுதாய தோட்டங்களும் விதானையார் மனைவி கண்ட வெருளியும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 19 பத்தி எழுத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது.