முகம்மது காசிம் சித்தி லெவ்வை (தொகுப்பாசிரியர்). கண்டி: முகம்மது காசிம் சித்தி லெவ்வை, 1வது பதிப்பு, 1897. (கொழும்பு: தாரகா (Star) அச்சியந்திரசாலை).
(6), 200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15சமீ.
முஸ்லிம் சமுதாயத்திலே பரவியிருந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தெறிவதற்கு அறிஞர் சித்திலெப்பை முன்னின்று உழைத்துவந்தார். பாரம்பரியப் போதனைகள் சிலவற்றினால் மக்களது சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சமுதாயம் முல்லாக்களால் வரையறுக்கப்பட்ட ஒருசில கட்டுக்கோப்புகளை மீறமுடியாமலிருந்தது. அந்த நிலையைத் தகர்த்தெறிவதற்கு முன்வந்த சித்திலெப்பை ‘ஞானதீபம்’, ‘அஸ்றாறுல் ஆலம்’ ஆகியவற்றின் மூலமாக இஸ்லாமியத் தத்துவங்களைக் காரண காரியத்தோடு விளக்க முற்பட்டார். இஸ்லாமிய தத்துவ விளக்கங்களையும் ஞானக் கோட்பாடுகளையும் காலத்துக்கேற்ற வகையில் ஒப்பியல் முறையில், கதைகளாகவும் உருவகங்களாகவும் விளக்கம் கொடுத்து வாழ்க்கையின் இரகசியங்களிற் காணப்படும் இஸ்லாமியக் கோட்பாட்டுச் சிறப்புகளை தெளிவுபடுத்தியுள்ளார். அறிஞர் சித்திலெப்பை 1897-ல் எழுதி வெளியிட்ட ‘அஸ்றாறுல் ஆலம்’ என்ற நூலுக்கு எதிராகப் பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து அருள்வாக்கி ‘தன்பீகுல் முரீதீன்’ என்ற ஒரு உரைநடை நூலை எழுதியதாகவும் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86000).