என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).
255 பக்கம், விலை: ரூபா 1300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6337-00-1.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையும் அதனுடன் தொடர்புள்ள பல்வேறு அம்சங்களையும் பற்றிய இந்தத் தொகுதியின் இரண்டு பகுதிகளும், மொத்தமாகப் பதினெட்டு ஆக்கங்களை உள்ளடக்குகின்றன. முதலாம் பகுதியில் உள்ள கட்டுரைகளில் தேசிய இனப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்புலமும் அரசியல் பொருளாதாரமும் கோட்பாட்டு ரீதியில் அணுகப்படுகின்றன. இரண்டாவது பகுதியில் வரும் பதிவுகள் சிலவற்றில் தனிமனிதர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்தக் கட்டுரைகளும் தேசிய இனப்பிரச்சினையுடன் தெடர்புள்ளவையே. எல்லாக் கட்டுரைகளும் ஒரு பொதுவான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இந்தத் தொகுப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் நிலைபெறு மனித மேம்பாடு (Sustainable human development) ஆகியவற்றை, மக்கள் ஜனநாயகத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும் சவால் பற்றிய திறந்த விவாதங்களுக்கு உதவுகின்றன. 1941இல் யாழ்ப்பாணம், சுதுமலையில் பிறந்த என்.சண்முகரத்தினம் (சமுத்திரன்) யாழ். இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பல்கலைக்கழகம் புகுவதற்கு முன்பிருந்தே இடதுசாரி அரசியலில், குறிப்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பேராதனை வளாகத்தின் விவசாய பீடத்திற்குத் தெரிவானதன் பின்னர் பல்கலைக்கழகத்திலும் இடதுசாரி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். 1964இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டதன் பின்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இந்நூலின் முதற் பகுதியில் சிங்களப் பெருந்தேசியவாதம்-அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும் (1983, 2017), தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சினையும்-குறியீடுகளும் யதார்த்தங்களும் (2017), இலங்கை தேசிய இனப்பிரச்சினை எதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு (2020), யாழ்ப்பாணத்தில் ஏழு நாட்கள்: இந்திய அமைதிப்படையின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வு (1989), வடக்கு-கிழக்கில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை (1990), தேசிய இனப்பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும் (2021), வாழ்வாதாரத்திற்கும் அப்பால் வடக்கு-கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சினையும் (2012, 2017), அபிவிருத்தி-மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? (2013, 2017), இலங்கை அரசு ஒரு அபிவிருத்திஅரசா? தோற்றங்களும் உள்ளடக்கங்களும் (2013), இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் (2017), வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு ஆய்வறிக்கை பற்றிய விமர்சனக் கருத்துரை (2019), அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வும் (2018), பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும் (2020) ஆகிய கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா? (2017), தோழர் விசுவானந்ததேவன்-ஓர் அரசியல் உறவு பற்றிய மீள்சிந்திப்பு (2016), ஏ.ஜே.-ஒரு விவாதம் தந்த உறவு (2007), அ.சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு (2018), சபாலிங்கம்- காலந்தாழ்த்திய ஒரு அஞ்சலி (1999) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71428).