17264 இலங்கையின் கல்வி வரலாற்றுச் செல்நெறிகள்.

சபா.அதிரதன், சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 205 பக்கம், விலை: ரூபா 975., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-77-5.

இந்நூல் பண்டைய காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெறும் வரை நாட்டில் வளர்ச்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், கல்வி ஏற்பாடுகள், கல்வி மரபுகள் என்பவை பற்றியதாகும். இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னைய கல்வி வரலாற்றைச் சரியாக விளங்கிக் கொள்ளவும் இதன் மூலமாக இலங்கை கல்வி முறையின் கடந்த கால மற்றும் நிகழ்காலச் செல்நெறிகளை ஒப்பிட்டு ஆராயவும் அது தொடர்பாக முறையான புலக்காட்சியைக் பெற்றுக்கொள்ள உதவும் வகையலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் இலங்கையின் கல்வி முறைமை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் சமகாலக் கல்விமுறையின் பல்வேறு பரிமாணங்களை விளங்கிக்கொள்ள இவ்வரலாற்றுப் பின்புலம் பற்றிய நூல் பேருதவியாக அமையும். கல்வி வரலாறு பற்றிய வெளியீடுகள், படைப்புகள் தமிழ்மொழியில் மிக அரிதாக உள்ளதனைக் கருத்தில் கொண்டு தமிழ்மொழி மூலமாகக் கற்போரின் தேவைகளை முன்னிலைப்படுத்தி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. புராதன இலங்கையிற் கல்வி: 16ஆம் நூற்றாண்டு வரை, போர்த்துக்கேயர்; காலக் கல்வி முறை (1505-1658), ஒல்லாந்தர் காலக் கல்வி முறை (1658-1796), பிரித்தானியர் காலக் கல்வி முறை (1796-1931), அரசாங்க சபைக்காலத்தில் கல்வி முறை (1931-1947), குடியேற்றவாதக் கல்விக் கொள்கை, கல்விக் கொள்கைகளும் அபிவிருத்தியும் (1870-1930) ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அமரர் சோ.சந்திரசேகரம் (1944-2022) கல்வித்துறையில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாகப் பணியாற்றியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின்; கல்விப்பீட பீடாதிபதியாகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். கலாநிதி சபாரட்ணம் அதிதரன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்