நவாலியூர் சோ.நடராசன். கொழும்பு 11: எம்.டி.குணசேனா, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு 11: எம்.டி.குணசேனா, 217, ஒல்கொட் மாவத்தை). xi, 84 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. பிங்கலன் என்ற குரங்கின் கதை இது. ஆசிரியர் முன்னர் எழுதிய வினோதனின் சாகசம் என்ற சிறுவர் நாவலின் தொடர்ச்சியாக அமைவது. அதிலுள்ள பாத்திரங்களில் சிலவும் இந்நாவலில் வருகின்றன. பிங்கலன் என்ற சிறு குரங்கு பல வீரதீரச் செயல்களைச் செய்து கடைசியில் உலகச் சுற்றுப்பயணமும் மேற்கொள்கின்றது. பிரயாணக்கட்டுரைகூட எழுதுகிறார். ஆனால் பாவம் அவருக்கு அழகையும் பெருமையையும் கொடுத்த வாலைத்தான் அவர் இழந்து விட்டார். கிம்பலன் தாத்தாவின் கூத்தை தனது நண்பர்களுக்கு காட்டப்போய் தனது அழகான திருவாலை இழந்து அவதிப்படுகிறார். ஆயினும் வாலில்லாமலே பல ஆபத்துக்களையும் கடந்து செல்கிறார். இவர் செய்யும் குறும்புகளைப் படிப்பவர்களுக்கு இது ஒரு குரங்கின் செயலா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தவும் கூடும். திருடனின் சட்டைப் பையிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பி அதே சடடைப்பையில் ஒரு பூனையை லாவகமாக அடைத்துவிட்டு ஓடிய பிங்கலனின் சாமர்த்தியத்தைக் கதையில் காணலாம். இத்தகைய வீரச் செயல்களினால் அவர் பின்னர் மகாராஜா பதவியைக்கூட அடைகின்றார். நகைச்சுவை நிரம்பிவழிய எளிய நடையில் தமிழில் பிங்கலனின் கதை எழுதப்பட்டுள்ளது. காட்டில் நடக்கும் இக்கதையைப் படிக்கும் சிறார்களையும் காட்டுக்கே அழைத்துச் சென்று விடுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.