முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்).
xxx, 126 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91728-14-4.
மட்டக்களப்பில் வழங்கும் நாட்டார் கலையம்சங்களில் வசந்தன் கூத்தும் ஒன்று. அக்கூத்தாட்டத்தின் போது பாடப்படும் பாடல்கள் கிழக்கிலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. அப்பாடல்களை ‘வசந்தன் கவி’ எனப் பொதுப்பட அழைக்கும் மரபொன்றும் உண்டு. காலமாற்றத்தால் வசந்தன் கூத்தும் வசந்தன் கவிகளும் அருகி வரும் நிலையேற்பட்டுள்ளது. இந்நிலையில் முனைவர் முருகு தயாநிதி அவர்களின் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் தாளிசை முதலாக அபயவசந்தன் -2 ஈறாக மொத்தம் எண்பத்தி ஆறு தலைப்புகளைக் கொண்டதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் அம்மன் பள்ளு வசந்தன், வசந்தன் பள்ளு, பள்ளு வசந்தன், தானானாப்பள்ளு, செவ்வாய்ப்பள்ளு, ஞானவேதியர் பள்ளு, நரேந்திரசிங்கன் பள்ளு, இராசசிங்கன் பள்ளு, அம்மன் பள்ளு என்பதோடு, வேளாண்மைச் செய்கை வயந்தன், சாத்திரம் கேட்கப் போதல், விதைத்தல், கத்தியடிக்கப்போதல், வெட்டுதல், உப்பட்டி கட்டல், சூடு வைத்தல், சூட்டு வசந்தன், களம் வெட்டல், மாடு பினைத்தல், மாடு பிடித்தல், பொலி காவுதல், நெல் சுமத்தல், புதிர் காவுதல், செவ்வாய் வசந்தன், என்பன முழுமையாக வேளாண்மை செய்வதையே வாழ்வாதாரமாகக் கொண்ட பள்ளர்களின் பள்ளிசைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவ்வாறே நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் படைப்பு வடிவங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். ‘இந்நூலில் பதிப்பாசிரியருடைய கடின முயற்சியும் உழைப்பும் இந்நூலில் தெளிவாகத் தெரிகின்றன. சதாசிவஐயர் பதிப்பு, பொன்னம்பலம் கையெழுத்துப் பிரதி, நல்லதம்பி கையெழுத்துப் பிரதி, முருகேசு கையெழுத்துப் பிரதி, செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வரலாறு போன்ற பல்வேறு வகையான பிரதிகளைக் கண்டு அதிலிருந்து தனித்துவமான ஈடுபாட்டால் களத்தில் பங்குபெற்ற அனுபவத்தால் அறிந்த வாழ்வியலையும் இணைத்து இத்தகைய செவ்வியல் பதிப்பினை ஆக்கியுள்ளார்’ என்று இந்நூலுக்கு உரை வழங்கிய பேராசிரியர் இ.பேச்சிமுத்து அவர்கள் குறிப்பிடுகிறார். முனைவர் முருகு தயாநிதி, இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.