தன் வரலாறு. மைதிலி றெஜினோல்ட். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
412 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ., ISBN: 978-624-94650-1-5.
பிறக்கும் பிள்ளைகளில் சாதாரணமான, அசாதாரணமான பிள்ளைகளை இனங்காண அவர்கள் கடந்துவரும் வளர்ச்சிப் படிக்கட்டுகள் உதவியாக அமைகின்றன. ‘ஓட்டிசம்’ எனப்படும் மூளைவிருத்தி நிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை புறத்தோற்றத்தில் இனங்காண முடியாது போகலாம். பிள்ளைகளின் நடத்தைகள், செயற்பாடுகள், தொடர்பாடல், சமூக நடத்தைகள், புலன் சார்ந்த செயற்பாடுகள் என ஒரு தொடரான விருத்திப் படிக்கட்டுகளில் ஏற்படும் தடைகள் அல்லது தாமதங்களைக் கொண்டு, ஓட்டிசத்தை இனங்காண குறைந்தது முழுமையாக இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும். மகவைப் பெற்ற தாய் தன் பிள்ளை குறித்த கவலையை முதல் மூன்று மாதங்களுக்குள் வெளிக்கொணர்வார். நாடு கடந்து சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தவரான திருமதி மைதிலி றெஜினோல்ட் ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் தாய் என்ற வகிபாகத்தின் வழிநின்று தன் சொந்த அனுபவங்களை இந்நூலின் வழியாக தமிழர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார். தன் மகனின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் தாயாக அவர் எதிர்நோக்கிய பின்னடைவுகளையும் சவால்களையும் வெற்றிகளையும் அவதானித்து தெளிவான இலகு நடையில் இந்நூலில் எழுதியுள்ளார்.