ஆனந்தா ஏ.ஜீ.இராஜேந்திரம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
iv, 54 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
மகுடம் பதிப்பகத்தின் 69ஆவது வெளியீடாக அமரர் ஆனந்தா ஏ.ஜீ.இராஜேந்திரம் அவர்களின் கவிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரச வங்கியொன்றில் முகாமையாளராகக் கடமைபுரிந்த இவர் ஒரு தீவிர தமிழ்த் தேசியப் பற்றாளராவார். இதன் காரணமாக பல வருட காலமாக சிறையில் கழிக்க நேர்ந்தது. அக்காலத்தில் தான் எழுதிய ’மாலையில் ஓர் உதயம்” என்ற நாவலை வெளியிட்டிருந்தார். இவரது ‘இன்றைக்காவது’ என்ற குறுநாவல் இந்தியாவில் சுபமங்களா இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்றது. சிறுவர் கதைகள், குறுநாவல், நாவல், கத்தோலிக்க இலக்கிய படைப்புகள் எனப் பல படைப்புகளைத் தந்த இவர் ஒரு ஓவியருமாவார். அவர் மறைந்த மூன்று வருடங்களின் நினைவாக அவர் தனது மூன்று அப்பியாசக் கொப்பிகளில் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தொகுத்து அவர் வரைந்த ஓவியங்களுடன் இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. கிறிஸ்தவ சிந்தனைகளுடன் வாழ்வை அணுகும் முயற்சியாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன. கத்தோலிக்க மதக் கருத்துக்களை உள்வாங்கி தனது கவிதைப் படைப்புக்களை புதிய கோணத்தில் இவர் படைத்துள்ளார்.