பொலிகை ஜெயா (இயற்பெயர்: பன்னிருகரம் ஜெயக்கொடி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 66 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-39-8.
இக்கவிதைத் தொகுப்பு 46 கவிதைகளை உள்ளடக்குகின்றது. காதல் மன ஏக்கம், செய்தொழில், இயற்கை, வாழ்வின் எதிர்மறை, அதிகார அரசியல் என்பவற்றுடன் புத்தனுக்கு ஒவ்வாத கொடுமைகளும், அழிவுகளும், முள்வேலிகளும், எம் தேசத்தில் மானிடம் செத்துவிட்டது என்ற மனவலி இக்கவிஞனின் கவிதைகளில் புலப்படுகின்றன. மக்களை வதைக்கும் நிலை தொடர்கின்ற சூழலை முன்வைத்து ஆசிரியர் தன் முதலாவது கவிதைத் தொகுதியான இந்நூலுக்கு பொருத்தமான தலைப்பினை இட்டுள்ளார். நையாண்டிக் கவிதைகளாக ‘வந்திடுங்கள் அரசியல் பேரணிக்கு’, ‘எனக்கு எதுவுமே தெரியாத’, ‘என் கிறுக்கல்’ ஆகிய கவிதைகள் அமைகின்றன. பேரினவாதத்தின் பேய் முகங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் ‘நிர்வாண தர்மத்தின் ஆக்கிரமிப்பு’, ‘என் மண்ணின் மரணம்’, ‘தொலைத்த கிராமியம்’, ‘சிறகொடிக்கப்பட்ட பறவைகளின் விடுதலை’ என்பனவும், சிறுவர்களுக்கு புத்தி புகட்டும் கவிதைகளாக ‘வாசிப்பை வழமையாக்கிடு’, ‘மனிதனே’, ‘உயிரெழுத்து’ என்பனவும் அமைந்துள்ளன. எமது தாயக உணவுப் பாரம்பரியத்தை மீட்டெடுத்துப் பார்க்கும் கவிதைகளாக ‘ஒடியல் கூழ்’, ‘பனங்கிழங்குத் துவையல்’ ஆகியன வடிக்கப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 56ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 99258).