நடா சுப்பிரமணியம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
166 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-74-0.
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடா சுப்பிரமணியத்தின் இரண்டாவது நூலாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ஓயாமல் பேசுகின்ற அவரது ஊரின் கடைலைகளிடம் கவிதைகளைக் கற்றிருந்தவர் இக்கவிஞர். அங்கே நீண்ட விரிந்த வெண்மஞ்சள் மணற்பரப்பில் கிறுக்கிக் கிறுக்கி கவிதைகள் வரையப் பயின்றுவந்தவர். காலம் ஒரு பெருமழையின் ஊடாக இக்கவிஞனைப் பயணிக்க வைத்திருக்கிறது. அந்த மழையில் நனைந்து நனைந்து இவர் நடந்து வந்த அனுபவங்களை தனக்குத் தெரிந்த மொழியில் தனக்குத் தெரிந்த வகையில் இங்கு பதிவுசெய்திருக்கிறார். ஆகவே இங்கே இவரது எழுத்துக்களில் இவரது மனதின் ஈரம் இருக்கும். இவரது வாழ்வியலின் சாரம் இருக்கும். ‘மழையில் நனைந்த ஒரு பொழுதில்’ என்ற கவிதையில் தொடங்கி ‘ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மகா சமுத்திரம்’ ஈறாக 38 கவிதைகளை இக்கவிஞர் தன் தொகுப்பில் அடக்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 278ஆவது நூலாக வெளிவந்துள்ளது.