எஸ்.ஏ.ஐ.மத்தியூ. கல்முனை: கார்மேல் பாத்திமாக் கல்லூரி பழைய மாணவர் வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
xi, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
இரண்டு நாடகங்களையும் ஒரு சிறுகதையையும் உள்ளடக்கிய நூல் இது. 1974இல் எழுதப்பட்ட ‘அன்பினில் மலர்ந்த அமர காவியம்’ என்ற முதலாவது நாடகம் யேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பவற்றைப் பற்றிப் பேசுகின்றது. ‘இன்ப மரணம்’ என்ற இரண்டாவது நாடகம், இலங்கையின் தேசப்பற்று, இன ஒற்றுமை ஆகியவற்றின் அவசியத்தைப் போதித்து, ஆடம்பர வாழ்வினை அகற்றல், சுயமுயற்சி ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. 1960இல் எழுதப்பட்ட இந்நாடகம் 1958இல் ஏற்பட்ட தமிழ் -சிங்கள கலவரங்கள், அந்நாட்டில் அமுலாக்கப்பட்ட அவசரகால நிலைமைகள் என்பவற்றை உற்று நோக்கி சுதந்திரத்திற்காகச் சிங்களவர்களும் தமிழரும் இணைந்து செயற்பட்டதை நினைவுகூர்ந்து இச்சிறு தீவில் எதிர்கால இன ஒற்றுமையின் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றது. மூன்றாவதாக உள்ள ‘அன்பு இல்லாவிடில்’ என்ற சிறுகதை மனித வாழ்வின் அடிநாதம் அன்பு மட்டுமே என்பதை வலியுறுத்துகின்றது. இக்கதை 1970இல் ஒரு சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. நூலாசிரியர் அருள்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு 1960களின் முற்பகுதிகளில் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்தவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114847).