அனோஜன் பாலகிருஷ்ணன். சென்னை 600014: கிழக்கு பதிப்பகம், 177/103, முதலாவது தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
142 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×12.5 சமீ., ISBN: 978-81-8493-863-0.
யாழ்ப்பாணம் அரியாலையில் 90களின் ஆரம்பத்தில் பிறந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது சிறுகதைத் தொகுதி ‘சதைகள்’ என்ற பெயரில் 2016இல் வெளிவந்தது. ‘பச்சை நரம்பு’ இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. இதில் வாசனை, நானூறு ரியால், பச்சை நரம்பு, பலி, கிடாய், இணைகோடு, வெளிதல், மனநிழல், இச்சை, உறுப்பு ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை முன்னர் கல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகநாழிகை, புதிய சொல் ஆகிய இலக்கிய இதழ்களில் பிரசுரமானவை. அனோஜனின் மொழி அவரின் மிகப்பெரிய பலமாக அமைந்து விடுகின்றது. இவருடைய கதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் பழகித் தேர்ந்த லாகவத்துடன் பிசிறுகள் ஏதுமின்றி இலக்கை நோக்கிச் சீறிச் செல்கின்றன். ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. போர் ஒரு பின்னணி இசை போல கதைகளில் தொடர்ந்து ஒலிக்கிறது. அனோஜன் போரைத் தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதுகிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும் ரணசிங்க, ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்லும் செழியன், ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்குப்போடுகிறார். ‘வாசனை’ கதையில் சுட்டுக் கொல்லப்படும் தந்தை, சட்டவிரோதமாக வளைகுடா நாட்டில் சிக்கி ஊர் திரும்ப வழிவகையின்றி தவிக்கும் ‘400 ரியாலின்’ கதைசொல்லி, போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நண்பனின் சடலத்தை காணாமல் தவிக்கும் ‘மனநிழல்’, எனப் போர் ஆரவாரமின்றி அன்றாட நிகழ்வைப் போல் கடந்து செல்கிறது. ‘மனநிழல்’ கதையில் மனிதனின் அடிப்படை எண்ணமான இருப்புக்கான போராட்டம் எப்படியான குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்று அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பலி’, ‘400 ரியால்’ மற்றும் ‘மனநிழல்’ ஆகிய கதைகள் அரசியல் மற்றும் சமூக மதிப்பீடுகளின் தளத்தில் காமத்தின் சாயை இன்றி நிகழ்கின்றன. பிறழ் காமத்தை, அதன் உறவுச் சுரண்டலை பேசும் கதைகள் என ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’, ‘வெளிதல்’ மற்றும் ‘உறுப்பு’ ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம். ‘வாசனை’ மற்றும் ‘இணைகோடு’ காமத்தைப் பின்புலமாக கொண்டு உறவுகளின் நுட்பத்தை சொல்கின்றன.