அலெக்ஸ் பரந்தாமன் (இயற்பெயர்: இராசு தங்கவேல்). முல்லைத்தீவு: இராசு தங்கவேல், கைவேலி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
231 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93592-0-8.
இது ஈழப் போரின் இறுதி நாட்களைப் பதிவு செய்யும் ஒரு நாவலாகும். சாதாரண பொதுமகனின் பார்வையில் தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தத்தையும் அதனுள் வாழ்ந்த அவலத்தையும் அரசியல் சார்பு நிலை நின்று நோக்காமல், வெளிப்படையாக சம்பவத் தொடர்களின் ஊடாக எடுத்துச் சொல்கின்றது. வேறு வழியின்றி அக் காலப்பகுதியில் வன்னியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஓர் இளம் குடும்பஸ்தனின் வாழ்க்கை நிகழ்வுகளின் ஊடாக அக் காலகட்டத்தை எழுத்தாளர் எமது மனங்களில் விரித்துச் செல்கின்றார். நாவலின் கதை மன்னார், கிளிநொச்சி மக்களின் இடப்பெயர்வைச் சொன்னாலும், புதுக்குடியிருப்பிலுள்ள கைவேலி கிராமத்திலிருந்து முல்லைத்தீவிலுள்ள மாத்தளன் வரையுமான இடப்பெயர்வின் அவலங்களை நுணுக்கமாகச் சித்திரிப்பதோடு, அங்கு வாழ்ந்த மக்களின் மன உணர்வுகளையும், அவஸ்தைகளையும் நுட்பமாகச் சொல்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கைவேலி கிராமத்தில் வசித்துவரும் அலெக்ஸ் பரந்தாமனுக்கு 2022ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட கலாசாரப் பேரவை முல்லைக் கலைக்கோ விருதும், கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன.