குணா கவியழகன். தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, ஜனவரி 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19576-70-8.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணா கவியழகன், தன் இளம் வயதிலிருந்தே போராட்ட அரசியலில் பயணிப்பவர். ஊடகப் பணிப்பாளராக, அரசியல் ஆய்வாளராக, எழுத்தாளராக தமிழ்ப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர். 500இற்கும் மேற்பட்ட அரசியல், இராணுவ, சமூகக் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ஆறாவது நாவலாக போருக்குப் பின்னரான பத்தாண்டுகள் கழிந்த ஒரு காலகட்டப் பின்புலத்தில் நிகழ்வதான இந்நாவல் வெளிவந்துள்ளது. இவரது விடமேறிய கனவு என்ற நாவல் பின்னாளில் வுாந ிழளைழநென னுசநயஅ என்ற பெயரில் ஆங்கிலமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘கடைசிக் கட்டில்’ போருக்குப் பின்னரான பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ஈழத்தமிழரின் வாழ்க்கை நிலைமையை, அவர்களது அரசியல் நிலையை குறியீடாக வழங்குகின்றது. மேலெழுந்தவாரியாக இது யாழ்ப்பாண வைத்தியசாலையின் புற்றுநோயாளர் பிரிவில் (பத்தாம் நம்பர் வார்ட்) உள்ள இறுதிநிலை நோயாளர்கள் நால்வரின் பின்னணியில் வடிவமைக்கப்படும் கதை. இவர்களின் வாழ்வின் இறுதிக் காலத்தில் படுத்திருக்கும் கட்டில்களே ‘கடைசிக் கட்டில்’ என்ற குறியீட்டுப் பெயருடன் அங்கு சுட்டப்படுகின்றது. அன்றாடம் அங்குள்ள நோயாளி ஒருவரைப் பார்க்கவரும் உறவினரான ‘வஞ்சி’ என்ற இளம்பெண்ணின் மீது யாழ்ப்பாணத்தின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விடமாக அமைந்துவிட்ட ‘திருநகர்’ என்ற பிட்டியிலிருந்து முன்னேறி வைத்தியசாலையில் பணியாற்றிவரும் அந்தப் பிரிவின் சிற்றூழியரான கதைசொல்லி கொள்ளும் ஒருதலைக் காதலாக தோற்றம் பெற்று வளர்த்தெடுக்கப் பெறுகின்றது. இந்நாவலை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு ‘வஞ்சி’ என்ற குறியீட்டை ‘தமிழ் ஈழம்’ எனவும், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தமது வாழ்வை சுயவிமர்சனம் செய்ய விழையும் கடைசிக் கட்டில் நோயாளர்கள் நால்வரும் சுதந்திரத் தாயகத்தை எதிர்பார்த்து இன்று கையறுநிலையில் உள்ள ‘ஈழத்தமிழ் மக்களாகவும்’ இலங்கைத்தீவில் வடக்க கிழக்கு தாயகத்தின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு ஈற்றில் ‘திருநகர்’ ஆக ஆக்கமுனையும் ஆதிக்க அரசின் போக்கையும் உணர்ந்துகொள்ள முடிந்தால், இந்நாவல் சொல்லவிழையும் ஆழ்ந்த அரசியல் அபாய எச்சரிக்கை வாசகருக்குப் புலப்படும்.