17778 திருப்பங்கள்: ஒன்பது பெண் எழுத்தாளர் இணைந்தெழுதிய குறுநாவல்.

மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்), கோகிலா மகேந்திரன் (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xxiv, 78 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5407-03-3.

இந்நாவல் திருமதி இந்திராணி தாமோதரம்பிள்ளை (திருமதி இந்திராணி புஷ்பராஜா), மாவை பாரதி (திருமதி பாகீரதி கணேசதுரை), திருமதி நயீமா சித்தீக், சாரதா சண்முகநாதன் (திருமதி சாரதா பரநிருபசிங்கம்), ஆனந்தி (திருமதி மாதினியார் ஆனந்த நடராசா), மண்டூர் அசோகா (திருமதி அசோகாம்பிகை யோகராஜா), கோகிலா மகேந்திரன் (திருமதி கோகிலாதேவி மகேந்திரராஜா), அருண் விஜயராணி (திருமதி அருண்விஜயராணி செல்லத்துரை), தேவமனோகரி (திருமதி தேவமனோகரி ராஜன்) ஆகிய ஒன்பது படைப்பாளிகளின் கூட்டு முயற்சியாக வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணக் கிராமமொன்றில் விவசாயத் தொழிலாளி-அவரது வறுமைப்பட்ட வாழ்க்கைச் சூழலிலும் கணவனது குணாம்சங்களைப் புரிந்துகொண்டு ஒத்திசைவாகக் குடும்பம் நடத்தும் மனைவி பார்வதி, சமூக உணர்வும் நவீன சிந்தனைப் போக்குகளும் கொண்ட அவர்களது மூத்த மகன் முரளி, மரபில் ஊறிய பெற்றோரின் வழித்தடம் பற்றிவளர்ந்து, மணவாழ்வை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் மகள் சுமதி, தமயனின் வழியொற்றி புரட்சிகர சிந்தையுடன் வாழும் கடைக்குட்டி கௌரி. முரளி யாழ் மண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புறச்சூழலைக் கொண்ட மலையகத்தில் ஆசிரியப் பணியை ஏற்றுச் செல்கிறான். அங்கு அவனது உள்ளம் கவர்கின்றாள் ஏழ்மையில் வாழ்ந்தாலும் கல்வியில் பிரகாசிக்க முனையும் ரமணி என்ற மாணவி. இவர்களே நாவலின் பிரதான பாத்திரங்கள். யாழ்ப்பாணத்துக் கிராமத்தில் தொடங்கி, மலையகத்தில் சஞ்சரித்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிறைவுகொள்ளும் கதை. 13.07.1980 இல் தொடங்கி 07.09.1980 வரையிலான காலப்பகுதியில் ஒன்பது வாரத் தொடராக மித்திரன் வாரமலரில் வெளிவந்த தொடர்கதை இதுவாகும்.

ஏனைய பதிவுகள்