இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு, 1வது பதிப்பு, மார்ச்; 2016. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்).
viii, 154 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை (1939-2022) அவர்கள் எழுதிய இந் நாவலின் கதை அம்பாரை மாவட்டதின் ஒரு கிராமமான மல்லிகைத் தீவில் ஆரம்பமாகி அம்பாரை, சம்மாந்துறையுடன் தொடர்புபட்டு மட்டுநகரின் கல்லடிக்குச் சென்று பின்னர் வளமான வாழ்வு வாழும் காலத்தில் கல்முனைக்கு வந்து, வாழ்வின் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் அட்டப்பள்ளத்தில் நிலைகொண்டு விடுகின்றது. கிழக்கிலங்கையின் மேற்குறிப்பிட்ட இடங்களைப் பற்றி ஆசிரியர் கொண்டிருந்த பரீச்சயங்கள், அம்மக்களின் பேச்சு வழக்குகள், சமூக கலாச்சார வழமைகள் என்பன இந்நாவலை சுவையாக வளர்த்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை பாண்டிருப்பில் 15.09.1939இல் பிறந்தவர். 1961இல் பாண்டிருப்பு அரச தமிழ் கலவன் பாடசாலையில் உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்த இவர், 1963இல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயிலுனர் ஆசிரியராக பயிற்சிபெற்று, 1965இல் ஹட்டன் ஹைலண்ட் கல்லூரியில் பயிற்றப்பட்ட உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்தார். தொடர்ந்து லுணுகலை, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய இடங்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் 1982இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக காரைதீவு விபுலாநந்தா தமிழ் மகாவித்தியாலயம் (1983), நிந்தவூர் அல் அஷ்றக் மகாவித்தியாலயம் (1984) ஆகிய பாடசாலைகளில் பணியாற்றினார். பின்னர் 1988இல் கல்முனை மல்வத்தை விபலாநந்தா வித்தியாலயத்தில் அதிபராகவும், 1989இல் காரைதீவு விபுலாநந்தா மத்திய மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் பணியாற்றினார். 16.12.1996இல் சேவை ஓய்வுபெற்ற இவர் 20.09.2022இல் காரைதீவில் தனது தாய்மண்ணில் இறைபதமெய்தினார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250632 CC).