அகரமுதல்வன். சென்னை 600089: நூல் வனம், எம்.22, ஆறாவது ஒழுங்கை, அழகாபுரி நகர், ராமபுரம், 1வது பதிப்பு, மார்ச் 2024. (சென்னை: ரமணி பிரிண்டிங் சொலுஷன்).
224 பக்கம், விலை: இந்திய ரூபா 320., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-81-9476-233-1
‘ஒரு நாளைக்கு இந்த நடையெல்லாம் நின்று நிம்மதி வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் முள்ளிவாய்க்கால் வரை காத்திருந்தோம். வீரயுகத்தின் தணல் மேட்டில் குடியிருந்தோம். ஆனால் நிகழ்ந்தவை எல்லாமும் பயங்கரங்கள். இந்து சமுத்திரத்தின் மீது அந்தகாரம் கவிந்தது. வன்னியில் தனித்துப்போய் வெள்ளைக்கொடியோடு வெட்டைக்கு வந்தது மனுஷத்துவம். கைகள் பின்னால் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் கொன்று குவித்த பெரும் பிணக்குவியலுக்குள் அது தூக்கி வீசப்பட்டது. உலகம் போற்றும் மனுஷத்துவம் முகங்குப்புற நந்திக்கடலில் மிதந்தது. அதன் பிடரியை எத்தனையோ தேசங்களின் தோட்டாக்கள் துளைத்திருந்ததைக் கண்டேன். மனுஷத்துவத்தின் யுகமும் ஈழத்தமிழரின் வீரயுகமும் நந்திக்கடலில் முடிந்திருந்தது’ (அகரமுதல்வன்). இப்படைப்பாக்கம் சிறுகதையோ நாவலோ அல்லவென்பதை உறுதியாகக் கூறும் ஆசிரியர் இதற்கு ‘துங்கதை’ என்று பெயரிடுகின்றார். கந்தபுராணத்திலுள்ள ஒரு சொல் ‘துங்கதை’. அது துன்பத்தைக் குறிக்கவில்லை. உயர்வை, மானத்தை, கௌரவத்தை பறைசாற்றும் சொல். கிரேக்க சொல்லாடலில் ‘Ode’ என்றுள்ள இலக்கியப் பதத்தையொத்த சொல்லாக ‘துங்கதை’ அமைகின்றது.