17789 மாறுதல்கள்: நினைவின் பதிவுகள்.

தெளிவத்தை ஜோசப். கனடா: தாய்வீடு பதிப்பகம், Post Box 63581,Woodside Square, 1571, Sandhurst Cir., Toronto, Ontario M1V 1V0, 1வது பதிப்பு, ஜனவரி 2024. (சென்னை: த பிரின்ட் பார்க்).

viii, 485 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9947911-9-1.

கனடா-தாய்வீடு இதழில் வெளியான தொடர்கதையின் நூலுரு இது. இந்நாவல் மலையகத்தின் தேயிலைத்தோட்டம் ஒன்றுக்குள் நுழையும் பாலம் கேட் (Gate) என்ற ஒரு தோட்டத்தை (தெளிவத்தை) நினைவுபடுத்தியவாறே ஆரம்பிக்கும். இந்நாவலின் கதாபாத்திரங்கள் மலையகத்துத் தோட்டங்களில் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். உழைப்பையே நம்பிவாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் அபிலாசைகள், விருப்பு வெறுப்புக்கள், நலிவு-நம்பிக்கைகள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் கொடுமைகள் பற்றியும் இந்த நாவல் கூறுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீரகேசரியில் தொடராக வெளிவந்து பின்னர் 1974இல் 21ஆவது வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த ஆசிரியரின் காலங்கள் சாவதில்லை என்ற நாவலின் கதைக்களத்தை மாறுதல்கள் நாவலும் நினைவூட்டுவதால் காலங்கள் சாவதில்லையின் தொடர்ச்சியாகக் கருதக்கூடிய நாவல் இது. தெளிவத்தை தோட்டத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்நாவல் தோட்டத்துக்கு வெளியேயும் வெகுதூரம் பயணிக்கின்றது. அமரர் தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலிஎலவிற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தவர். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் ‘தெளிவத்தை’ என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார். ‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவருடைய முக்கியமான நாவல். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ‘குடை நிழல்’ நாவல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்