17793 மௌனத் தீவு.

வேலு பரி. கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

xiv, 240 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0210-24-4.

ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு என்பவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதனை தன் இளவயதுக் கனவாகக் கொண்டிருந்த வேலு பரியின் வரலாற்று நாவல் இது. வேலன், பாரி என்ற இரு கதாபாத்திரங்களின் நட்பும், ஒன்றுபட்ட சிந்தனையும் அவர்கள் கண்ட, கண்டுபிடித்த தமிழரின் வரலாற்றுச் சின்னங்களையும் வழிபாட்டு ஆலயங்களையும், தமிழ்க் கிராமங்களையும், அவற்றிற்கு போர்த்துக்கேயர் ஆட்சியில் நேர்ந்த விளைவுகளையும், அவர்களுக்கு எதிராக நடந்த போர் நடவடிக்கைகளையும் முப்பத்தெட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த வரலாற்று நாவலில் அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். ஆலய வழிபாடு, வரலாற்றுப் பதிவு, வீட்டில் ஆச்சரியம், ஆசிரியரைத் தேடி, ஏட்டின் இரகசியம், சிறை வாழ்க்கை, சஞ்சலம், தேடுதல், வேலனின் திட்டம், நண்பர்கள் கூடினர், உள்ளூர்ப் பயணம், முதற்படி, கப்பல் பயணம், அந்தமான், சந்தை, படகுப் பயணம், விபத்தின் விளைவு, மௌனத் தீவு, நடைப் பயணம், அரண், பொறி, தொடர்பு, சிறுவனின் உதவி, வேட்டை, சந்திப்பு, அறிதல், இடும்பன்பிள்ளை, சம்மதம், உதவி, காக்கும் தெய்வங்கள், உறவின் விளக்கம், கொண்டாட்டம், சுயதீங்கு, ஆயுதக் கிடங்கு, தண்டனையின் வலி, தாக்குதல், சண்டை, விடுதலை ஆகிய 38  அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வேலு பரி யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சின்னத்தம்பி வேலுப்பிள்ளை-ஆதிலட்சுமி ஆசிரியத் தம்பதிகளின் புதல்வனான இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். கனடாவில் மின்னியல் மற்றும் அச்சுத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று, அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில்  Print R Us என்ற அச்சகத்தின் உரிமையாளராக இயங்குகின்றார்.

ஏனைய பதிவுகள்