க.கணபதிப்பிள்ளை.யாழ்ப்பாணம்: இலக்கிய இரசனை வெளியீடு, 42/4, கல்லூரி வீதி, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணை).
8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் வித்துவான், சைவப்புலவர் கலைமாணி க.கணபதிப்பிள்ளை அவர்கள் ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ பற்றி நிகழ்த்திய வானொலி உரை இதுவாகும். இந்துசாதனத்தின் இலக்கிய இரசனை வெளியீட்டுத் தொடரின் முதலாவது வெளியீடாக வெளியிடப்பட்டது. இந்து சாதனம் பத்திரிகையின் 21.5.1965 ஆம் திகதிய இதழில் ‘தமிழ் இறையுருவானது என்பதைக் காட்டும் குற்றாலக் குறவஞ்சி: அதில் வரும் குதூகலக் காட்சிகள்’ என்ற தலைப்பில் இவ்வுரை வெளியாகியிருந்தது. திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றித் தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூலாகும். இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப் புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. குற்றாலக் குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக் குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது.