மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
125 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
திருக்குறள் பற்றிய விரிவான தேடலை மேற்கொள்ள விரும்பும் இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவதாக இத்தொகுப்பிலே சொல் நிலையில் குறட்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் புதிய கருத்து நிலையிலே திருக்குறள் பதிவுகளை இணைத்துப் பார்ப்பதற்கும் இத்தொகுப்பு பயன்படும். வள்ளுவர் பதிவுசெய்த பல்வேறு பேச்சுவகைகள் பற்றிய குறட்பாக்களின் தொகுப்பை வகைமாதிரியாகக் கூறலாம். தமிழைச் சிறப்பாகக் கற்கும் வாய்ப்பற்ற பிற துறையாளர்களுக்கு இத்தொகுப்புநிலை பெரிதும் பயன்படும். மேலும் இத்தொகுப்பிலே குறள் தொடர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை திருக்குறள் பற்றிய உரைகளை ஆற்றுவதற்கும் கட்டுரை எழுதுவதற்கும் குறிக்கோள் தொடர்களாக விளம்பரங்களிலே பயன்படுத்துவதற்கும் துணைசெய்யும். இவற்றுடன் திருக்குறள் பற்றிய புலமையாளர்களின் கருத்துப் பதிவான திருவள்ளுவமாலையும் இத்தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திருக்குறள் பெற்றிருந்த சிறப்பையும் அவர்கள் பாடிய பாடல்கள் பதிவுசெய்து வைத்துள்ளன. இன்னும் குறளின் சிறப்பால் வழங்கப்பெற்ற பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன. திருக்குறளுக்கு எழுதிய பழைய உரையாசிரியர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருக்குறளின் தனிச் சிறப்பியல்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.