ஸ்ரீ.பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9233-80-0.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் நான்காவதாகும். இதில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி ஆகிய ஒழுக்கவியல் நூல்கள் மூன்றும்; இடம்பெற்றுள்ளன. கபிலர் என்ற புலவர் (சங்கப் புலவர் கபிலர் அல்ல) இயற்றிய இன்னா நாற்பது, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாக வைக்கப்பெற்ற சிறப்புடையது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது இன்னிசை வெண்பாக்கள் இதில் உள்ளன. உலகத்தில் நீக்கப்படவேண்டியவை எவை என்பதைக் கூறி எதிர்மறை முகத்தால் நீதி உரைப்பது இந்நூல். துன்பம் தரும் நிகழ்ச்சிகள் இன்னின்ன என்று தொகுத்துரைக்கின்றது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் இன்னா என எடுத்துரைப்பதால் இன்னா நாற்பது எனப் பெயர்பெற்றது. இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நீதிநூலாகும். நாற்பது வெண்பாக்களால் ஆகிய இந்நூல் சங்கமருவிய காலத் தமிழ் நீதிநூற் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாக வைக்கப்பட்ட சிறப்படையது. உலகில் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். முதுமொழிக் காஞ்சி, மதுரைக் கூடலூர்க் கிழார் இயற்றிய நூலாகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகங்கள் பத்தினைக் கொண்டது. அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்’ என்னும் தரவு அடியோடு தொடங்குகின்றது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடக்கி வருகின்றன. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அவை சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, தவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து என்பன அவையாகும்.