ஸ்ரீ.பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9233-81-7.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் ஐந்தாவதாகும். இதில் நீதி வெண்பா, ஆசாரக் கோவை ஆகிய இரண்டு ஒழுக்கவியல் நூல்கள் இடம்பெற்றுள்ளன. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் நீதி நூலான ‘நீதி வெண்பா’ வின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வடமொழியில் காணப்படும் நீதி சாஸ்திரம் முதலிய நூல்களிலுள்ள ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பாகக் கருதப்படும் இந்நூலில் பெண்ணை முன்னிலைப்படுத்தி நீதிகூறும் தன்மை காணப்படுகின்றது. 100 வெண்பாக்களையுடைய இந்நூலில் காணப்படும் பல பாடல்களில் சைவ சமயச் சிறப்புப் பேசப்படுவதால் இந்நூலாசிரியர் சைவசமயத்தவராயிருக்கக்கூடும் என்பர். இந்நூல் 18ஆம் நூற்றாண்டிலேயே உரோமானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. ‘ஆசாரக் கோவை’ வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்த ஆசாரங்களின் கோவை நூல். இந்நூலின் ஆசிரியர் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் எனப்படுபவர். வாழ்வுக்கு அவசியமான ஆசாரங்களை ஒரு நெறிப்பட கோவையாகச் சொல்லும் இந்நூலில் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுள்கள் உள்ளன. பொதுவகையான ஒழுக்கங்களைத் தொகுத்ததுடன் நில்லாது, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்கவேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் புறத்தூய்மை அளிக்கும் செயல்களையும் மிகுதியாக இந்நூல் தந்துள்ளது.